சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் ‘கங்குவா’.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 38 மொழிகளில் ‘3D’ முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி படத்தின் முதல் காணொளி வெளியானது.
அதனைத் தொடர்ந்து படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி வெளியானது.
இந்த இரு காணொளிகளும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான ‘ஃபயர் சாங்...’ எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து விவரங்களை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10ஆம் தேதி கங்குவா வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து கங்குவா விலகியது. இதனால், சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஆனால் நடிகர் சூர்யா, ‘மூத்தவரான சூப்பர் ஸ்டாருக்கு வழிவிடுவதே சரியானது’ என்று கூறி கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்து ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.
புதிய வெளியீட்டு தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இந்த நிலையில் நவம்பர் 14ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

