நடிகர் சூர்யா ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ என்ற அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சுவாசிகா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
‘சாட்டை’ படத்தில் நடித்த சுவாசிகாவிற்கு அந்தப் படம் சிறப்பாக கை கொடுக்காத நிலையில் மலையாள கரையோரம் ஒதுங்கினார். அங்கு சுவாசிகாவிற்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தொடர்ந்து அங்கேயே தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தில் கெத்து தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் இளம் பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார் சுவாசிகா.
அந்தப் படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று தந்தது. கெத்து தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்த சுவாசிகா இந்தப் படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை தற்போது கவர்ந்துள்ளார். இதையடுத்து தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்ததாக ‘சூர்யா 45’ படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திரிஷாவும் இணைந்துள்ள நிலையில் சுவாசிகாவிற்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர்.
சுவாசிகாவைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நட்ராஜ் இணைந்துள்ளார். அண்மையில் இவர் ‘மகாராஜா’, ‘கடைசி உலகப்போர்’, ‘சொர்கவாசல்’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.