‘லப்பர் பந்து’ படம் தந்த தனித்த அடையாளம், சுவாசிகாவுக்குத் தமிழ், தெலுங்குத் திரையுலக வாசல்களை விசாலமாகத் திறந்துவிட்டிருக்கிறது.
அவரது நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள ‘நூறு சாமி’ படம் இன்னும் அழுத்தமான தாக்கத்தை விதைக்கும் என நம்புகிறாராம். தமிழில் பேசினாலும் அதில் மென்மையாய் மலையாள வாசனை பூசியிருக்கிறது.
‘நூறு சாமி’ கதையைக் கேட்டதும் உங்கள் மனம் என்ன சொன்னது?
”ஒரு மகள், தோழி, அம்மா இப்படி நிறையப் பெண்களின் முகத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம்தான் ‘நூறு சாமி’யில் வரும் எனது செல்வி கதாபாத்திரம். இன்றைக்கும் நிறைய இடங்களில், ஒரு பெண் விதவையாகிவிட்டால் வாழ்க்கை அவ்வளவுதான் என்பதுபோல் பார்வை உள்ளது. ஏதோ குற்றம் புரிந்த பெண் போன்றுதான் விதவைப் பெண்களைப் பார்க்கிறார்கள்.
“மீண்டும் திருமணம், வேலை என அந்தப் பெண்ணும் ஊருக்குப் பயந்து எதுவும் செய்யாமல் இருப்பார். அந்தக் கண்ணோட்டத்தை மாற்ற முடியுமா என்ற கேள்வியைத்தான் இந்தக்கதை எழுப்புகிறது.
“இயக்குநர் சசிகுமாருடன் இணைந்து பணிபுரிவது பெரிய அனுபவம். கதையைக் கேட்டு உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டுத்தான் படத்துக்குள் வந்தேன்.
“இது உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களம் ஆகும். கள்ளக்குறிச்சி பின்னணியில் கதை நகர்கிறது. அதனால்தான் சசிகுமார் படப்பிடிப்புக்கு முன்பு என்னை அந்தப் பகுதிக்கு வரவைத்து, நிறையப் பேரைச் சந்திக்க வைத்தார்.
“ஊரில் பெண்கள் நாள் முழுவதும் விவசாயம் செய்வது முதல், வீட்டு வேலை பார்ப்பது வரை கடுமையாக உழைக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவற்றையெல்லாம் உள்வாங்கித்தான் நடித்திருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“செல்வியின் 25 முதல் 40 வயது வரை உள்ள வாழ்க்கைப் பயணத்தைத்தான் என் கதாபாத்திரம் பிரதிபலிக்கும். இதில் அந்தந்த வயதுக்கான ஒப்பனை, சிகை அலங்காரம், உடல் மொழி அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறேன்.
விஜய் ஆண்டனி குறித்து?
நிஜ வாழ்க்கையில் நிறைய நல்லதைச் செய்பவர் விஜய் ஆண்டனி என அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்தபோது இன்னும் ஆச்சரியமாகத் தெரிந்தார்.
“மிகவும் எளிமையான மனிதர். கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்வது, வாழும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ வேண்டும் என நினைக்கும் ஒரு பண்பாளர் அவர்.
மலையாள, தமிழ் திரையுலக நடிகர்களின் அரசியல் ஆர்வம் குறித்து உங்கள் கருத்து?
“மூத்த நடிகர் மோகன்லாலிடம் அரசியல் ஆர்வம் குறித்து கேட்டால், ‘இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ’ என்று கூறிவிடுவார்.
மலையாளப் பக்கம் சுரேஷ் கோபி, கே.பி.கணேஷ்குமார் போன்ற சிலர் அரசியலில் இருக்கிறார்கள். அந்த மாதிரி வந்தவர்களுக்கு நடிக்க வருவதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் அரசியல் தொடர்பு இருந்திருக்கும்.
தமிழ்நாட்டிலும் அதேபோல் நல்ல அனுபவமுள்ளவர் வந்தால் நன்றாக இருக்கும். எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு நடிகர் மட்டுமே வந்து மக்களுக்குச் சேவை செய்வேன் எனக் கூறுவது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அரசியல் என்பது மிகவும் பொறுப்பான விஷயம்.

