அண்மைக்காலமாக புதுப்படங்களின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இளம் நடிகர், நடிகைகளின் வழக்கமாக வருகிறது.
மற்ற தனிப்பட்ட விவரங்களைவிட, படப்பிடிப்பு சமயத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.
அந்த வகையில் ‘வாஸ்கோடகாமா’ பட அனுபவங்களை அதன் நாயகி அர்த்தனா பினு பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘வாஸ்கோடகாமா’ படப்பிடிப்பு சென்னையில் உள்ள வசதியான குடியிருப்பில் அமைந்திருக்கும் பெரிய வீட்டில்தான் நடைபெற்றதாம்.
அதற்கு முன்னதாக சில கிராமப் பகுதிகளிலும் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
“படப்பிடிப்பு நடந்த இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். சென்னையில் இப்படத்தின் நாயகன் நகுல், நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், ஆகியோருடன் நானும் இருந்தேன்.
“எங்களைப் பார்த்து ரசிகர்கள் கையசைத்தபடியும் வணக்கம் தெரிவித்தபடியும் இருந்தனர். இடைவிடாமல் அவர்கள் இவ்வாறு தொடர்ந்து எங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ததைப் பார்த்தபோது வருத்தமாக இருந்தது.
“இதுதான் தமிழ் ரசிகர்களின் அன்பு என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறினார். மேலும், தமிழ் திரையுலகுக்கும் தமிழக அரசியலுக்கும் உள்ள தொடர்பையும் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ் சினிமாவில் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் மதித்துச் செயல்படுகிறார்கள் அதனால்தான் தமிழ்த்திரை உலகம் அற்புதமான களம் என்று சொல்கிறேன்,” என்கிறார் அர்த்தனா.
தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், விரைவில் இந்த நிலை மாறும் என்று நம்புகிறாராம் இந்த இளம் நாயகி.
தற்போது இளம் இயக்குநர்கள் சிலர் சொன்ன கதைகள் தன்னைக் கவர்ந்திருப்பதாகச் சொல்லும் அர்த்தனா, விரைவில் நல்ல அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
“சினிமா செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
“ சினிமா கலைஞர்களால் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை வைத்து அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்க இயலாது என்பதால் ரசிகர்களைக் கவர, புதுப்புது பகுதிகளை ஊடகங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
“அந்த வகையில், படப்பிடிப்பின்போது நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வது சுவாரசியமாக உள்ளது,” என்கிறார் அர்த்தனா பினு.
“யார் பற்றியும் குறை கூறாமல், நேர்மறையான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது நல்ல விஷயம். அதற்கு இந்தப் புதுப் பகுதி வழிவகுக்கும்.
“மேலும், தேவையற்ற சர்ச்சைகளும் தவிர்க்கப்படும். படப்பிடிப்பின்போது பலர் உடன் இருந்திருப்பர் என்பதால் தவறான, சர்ச்சையான தகவல்களை ஒருவர் தெரிவித்தால் உடனடியாக அது வெளியே தெரிந்துவிடும்.
“எனவேதான் பெரும்பாலான ரசிகர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் பிடிக்கும் என நம்புகிறோம்,” எனத் திரைத்துறை செய்தியாளர்களும் கூறுகின்றனர்.