தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்துப் பார்க்க முடியாது.
தமிழ் ரசிகர்களிடம் ஒரு காலகட்டத்தில் காதல் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
‘பூவே உனக்காக’ விஜய், மாதவன், பிரசாந்த், அரவிந்த்சாமி, சித்தார்த் உள்ளிட்டோரை காதல் நாயகன், ‘சாக்லெட் பாய்’ எனச் செல்லமாகக் குறிப்பிட்ட காலம் இருந்தது. இத்தகைய நாயகர்களின் பட்டியல் சற்று பெரிதாகவும் இருந்தது.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. முன்னணி நாயகர்கள் பலரும் இப்போது காதல் கதைகளைத் தவிர்த்து வருகிறார்கள் என்று ஆனந்த விகடன் ஊடகக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் செய்தியாளர் பாரதிராஜா.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்கள் முழுநீளக் காதல் கதைகளை இப்போது ஏன் தேர்ந்தெடுப்பதில்லை, பொதுவாகவே காதல் படங்கள் குறைந்து போனதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக திரைத்துறைப் படைப்பாளிகள் சிலர் பகிர்ந்துகொண்ட கருத்துகளையும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
“காதல், குடும்பக் கதைகளை படமாக்கினால் மட்டும் போதாது. அவற்றை நேர்த்தியாகச் சொல்ல வேண்டிய பொறுப்பும் இருக்கிறது,” என்கிறார் ‘96’, ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம்குமார்.
மேலும், “காதல் படங்கள் அறவே வெளிவருவதில்லை எனப் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. தொடர்ந்து வருவதில்லையே தவிர, அவ்வப்போது அத்தகைய படங்களை சிலர் உருவாக்குகிறார்கள்.
“அதே சமயம் ‘இதயம்’ மாதிரி முழுமையான காதல் படங்கள் வருவதில்லை என்று சொல்லலாம். இப்போதுள்ள சமூகத்தின் சூழல், மனநிலை, காதலைப் பார்க்கையில் ‘லவ் டுடே’ போன்ற படங்களைத்தான் எடுக்க முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், 1990களைச் சேர்ந்தவர்கள், இந்தப் படத்தை மனத்தளவில்கூட ஏற்க மாட்டார்கள். மாறாக, நகைச்சுவையுடன் கூடிய காதல் படம் என்றுதான் நினைப்பார்கள்.
“உண்மையில் இந்தக் காலத்துக் காதலின் தன்மையைத்தான் ‘லவ் டுடே’ படம் பிரதிபலித்தது. அண்மைய காதல் படங்களாக ‘திருச்சிற்றம்பலம்’, ‘லவ்வர்’ எனச் சில படங்களைச் சொல்லலாம். ‘குட் நைட்’ படம்கூட ஒரு காதல் கதைதான். என் அனுமானத்தில் ‘இதயம்’ மாதிரி படங்கள் இனிமேல் வருவது சாத்தியமில்லை,” என்கிறார் பிரேம்குமார்.
இப்போது வன்முறை விகிதமும் வன்முறை சார்ந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், காதல் படங்களே உருவாவதில்லை என்பதுபோல் தோற்றமும் இருக்கிறது என்பதும் இவரது கருத்தாக உள்ளது.
“சினிமா மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறையாக நான் நினைப்பது எதிர்மறை விமர்சனங்களைத்தான். இப்படிச் செய்பவர்களைச் சார்ந்துதான் தற்கால சினிமா சந்தை இயங்குகிறது. அவர்கள் சொல்வதை வைத்துதான் மக்கள் முடிவு செய்கிறார்கள்.
“இப்படிப் பலதரப்பட்ட காரணங்களால் அருமையான காதல் கதைகளோ அல்லது நல்ல விஷயத்தைச் சொல்லக்கூடிய தரமான படங்களோ வருவது குறைந்துவிட்டது.
“மக்களிடம் நல்ல படைப்புகளுக்கு ஆதரவு இருந்தால் மட்டுமே மென்மையான கதைகளைக் கையாள முடியும்,” என்றும் இயக்குநர் பிரேம்குமார் கூறியுள்ளார்.
‘மேயாத மான்’, ‘குலுகுலு’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமாரின் பார்வை வேறு மாதிரியாக உள்ளது. தரமான, ரசிக்கக்கூடிய காதல் கதைகளை நின்று நிதானமாக ரசிக்க ரசிகர்கள் தவறிவிடுவதாக இவர் குறிப்பிட்டுள்ளார். இவர், ‘லியோ’, ‘கூலி’ என லோகேஷ் கனகராஜ் படங்களின் எழுத்தாளரும் ஆவார்.
இது அவசர உலகமாகிவிட்டது என்றும் மக்களிடம் பொறுமை போய்விட்டது என்றும் சொல்கிறார் ரத்னகுமார்.
“காதல் படங்களை எப்போதாவது ஒருமுறை தேடிப்பிடித்துப் பார்க்கிறோம். நிஜத்தில் மிகவும் வேகமான காதல்தான் வெற்றி பெறுகிறது.
“இப்போது காதலுக்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. ஒரு கடிதம் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.
“ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, அதற்கான பதில் வர ஐந்து நிமிடங்கள் தாமதமானாலும்கூட, ‘நாம் அனுப்பியதைப் பார்க்கவே இல்லை’ என்று கோபப்பட்டு அத்தகவலை அழித்துவிடுகிறார்கள். காதலர்களுடைய பொறுமையின் அளவு இவ்வளவுதான் இருக்குது.
“ஆனாலும் ஆச்சரியமாக ‘96’, ‘மெய்யழகன்’ போன்ற படங்களும்கூட சில சமயங்களில் வெற்றி பெறுகின்றன,” என்கிறார் ரத்னகுமார்.
‘டிராகன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றும் அவை வெற்றிபெற்றால், பிறகு அப்படியான படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றும் இவர் கூறுகிறார்.
‘96’, ‘அமரன்’ படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இப்போது தமிழ் சினிமா ஒன்றை நோக்கி நகர்தல் என்கிற இடத்திற்கு வந்துவிட்டது. அதாவது, ஒருவரை மட்டுமே நம்பிப் பணத்தை முதலீடு செய்யும் இடத்துக்குப் போய்விட்டது எனச் சுட்டிக்காட்டுகிறார் ரத்ன குமார்.
“பெரும்பாலானோர் லாபத்தைத் தரும் மசாலாப் படங்களைத்தான் உருவாக்க நினைக்கிறார்கள். உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை,” என்கிறார்.
மசாலாப் படங்களில் மனிதனின் அடிப்படையான எந்த உணர்வையும் உண்மையாகச் சொல்லிவிட முடியாது என்றும் காதல், பசி, நட்பு, உறவுச்சிக்கல்கள் என எதையுமே மசாலாவில் தடவிக் கொடுக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார் கார்த்திக் நேத்தா.
“காதலை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது ஒரு கலை. பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களாக வருபவர்களுக்கு நல்ல வாசிப்பு அவசியம்.
“வாசிப்பின் மூலம்தான் அகத்தை உணர முடியும். அகத்தை வாசித்து வந்தால் ஆழ் மனதில் இருந்து காதலை எடுத்துச் சொல்ல முடியும்.
“பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்களின் படங்களை மட்டும்தான் விநியோகிப்பாளர்களும் ஓடிடி நிறுவனத்தாரும் வாங்குகிறார்கள்.
“இப்படிப்பட்ட சூழலில், இயக்குநருக்கு நேரக்கூடிய அதே நிர்பந்தம்தான் எங்களுக்கும் நேர்கிறது. இதனால் உணர்வுபூர்வமான எந்த ஒரு பாடலையும் கொடுக்க முடியாத நிலைக்கு நாங்களும் தள்ளப்படுகிறோம்,” என ஆதங்கப்படுகிறார் கார்த்திக் நேத்தா.
‘பியார் பிரேம காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களின் இயக்குநர் இளன் கூறுகையில், “ஒரு நடிகர், பெரிய நட்சத்திரமாக மாறும்போது அவர்களுக்கு காதல் கதைகள் மட்டும் போதுமானதாக இல்லை,” என்கிறார்.
முழுநீள காதல் கதையோடு சில கதாநாயகர்களை அணுகினால், ‘இது எனக்கான கதை இல்லை’ என்று ஒரே வரியில் முடித்துவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்.
“தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம், பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தார். அதே சமயத்தில் ‘ராயன்’ மாதிரி அடிதடிப் படங்களையும் செய்து, நாயகர்களை ஆராதிக்கிற ரசிகர்களையும் தக்க வைத்துக்கொள்கிறார்.
“தமிழில் காதல் கதைகளுக்கு எப்பவும் வரவேற்பு இருக்கும். 18 வயதை எட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது,” என்பதே இளனின் கருத்து.
அதிரடி, திகில் படங்களுக்கு இடையே காதல் படங்களிலும் தங்கள் அபிமான நாயகர்கள் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
“மென்மையான காதல் கதைகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே வரவேற்பு அளிக்கத் தவறியதில்லை. காதல் படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது உண்மைதான். எனினும், தரமான படைப்புகளுக்கு ரசிகர்களின் ஆதரவு நீடிக்கிறது. அந்த வகையில், ரசனை மாறவில்லை எனலாம். நல்ல காதல் படங்களுக்கு எங்களுடைய ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வரும்,” என்கிறார் மூத்த செய்தியாளர் சக்திவேல்.