பல்வேறு நாடுகளின் குடிமக்களும் உலகமும் உலக மக்களும் பெரும்பாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் சமயம் இது.
காரணம்...
பட்ஜெட் எனப்படும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வுகள் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற எந்த பட்ஜெட்டுக்கும் இளைத்ததாக இல்லை சினிமா பட்ஜெட்டு!
அந்த வகையில் தமிழ் சினிமாவின் லாப, நஷ்ட பட்ஜெட்டுகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் காலங்காலமாகத் தேர்வு செய்யப்பட்ட கதை என்ன பட்ஜெட் கேட்கிறதோ, அதைத் தயங்காமல் செய்வார்கள் தயாரிப்பாளர்கள்.
ஆனால், பட்ஜெட்டைத் தாண்டி பத்து காசு செலவு செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு திரைப்படம் உருவாகுவதை தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.
ஆனால், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கைக்கு சினிமா போன பிறகு, ‘குழி பறித்த குதிரை குப்புறவும் தள்ளியது’ கதையாக ஆகிப்போனது.
தொடர்புடைய செய்திகள்
ரூ.1,000 கோடியில் உருவாகுமா ‘வேள்பாரி’
ரஜினி, கமல், இயக்குநர்கள் மணிரத்னம், சங்கர் உள்ளிட்ட பெருந் தலைகளால் பலத்த நஷ்டம் ஏற்பட்டு போராடிக் கொண்டிருக்கிறது லைகா நிறுவனம்.
இந்த நிலையில்தான் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேள் வாழ்க்கையை ஆயிரம் கோடியில் படமாக்கும் திட்டத்தை முன்வைத்தார் சங்கர்.
மதுரை சங்கப் புலவர் கபிலர் புறநானூறு பாடலில் வேள் (குறுநில மன்னன்) பாரி குறித்து பாடிய பாடல்களை வைத்து 1950களில் கி.வா.ஜகந்நாதன் ‘பாரிவேள்’ என்ற பெயரில் அவருடைய வரலாற்றை எழுதினார்.
இது தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டது. இந்தக் கதையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அப்படியிருக்கையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘வேள்பாரி’ என்ற பெயரில் பெரும் நூலாக எழுதியுள்ளார். அதற்கு பெரும் தொகையை படத்தின் செலவுக்கணக்கில் குறிப்பிட்டனர். இப்படி ஆயிரம் கோடியை பட்ஜெட்டாகச் சொன்னார் சங்கர்.
ஆனால், லைகா நிறுவனம் சங்கரின் பெரிய ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டது. கூடவே இன்னொரு பேரிடியும் சங்கர் மீது இறங்கியிருக்கிறது.
‘எந்திரன்-1’ படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ஒரு தகவலை கிளப்பிவிட்டார்.
ஆனால், ‘ஜூகிபர்’ என்கிற 1997 - உதயம் இதழில் வந்த சிறுகதையை காப்பியடித்ததாக எழுந்த புகாரால் இந்திய அமலாக்கத்துறையினர் தலையிட்டு சங்கரின் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளனர்.
240 கோடிதான் ‘எந்திரன்’ வசூல் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
பட பட்ஜெட் முதல், பட உலக வசூல் வரை கணக்குகளைக் கொடுத்த சங்கரின் பத்து கோடி சொத்து சிக்கலில் சிக்கியுள்ளது.
ரூ.400 கோடியில் உருவாகும் ‘கூலி’
ரஜினியின் ‘வேட்டையன்’ படம் எங்கு பார்த்தாலும் வசூல் மழையாக பொழிகிறது என்ற தகவல் பத்து நாள்கூட தாங்காமல் பிசுபிசுத்தது. எதிர்பார்த்த வசூல் இல்லை.
‘கூலி’ படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், பாதிக்கு மேலான பட்ஜெட் தொகையை சம்பளத்திற்காகச் செலவிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.60 கோடி சம்பளம். அனிருத்திற்கு ரூ.15 கோடி, இதுபோக ரஜினி சம்பளம் ரூ.200 கோடி தாண்டும். மிச்ச சொச்ச பணத்தில்தான் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சன் பிக்சர்ஸ் ‘அண்ணாச்சி’ போன்ற வெற்றி பெறாத படங்களையும் பெரும் லாபகரமான படங்களாக்கி வருகிறார்கள். அது அவர்களின் திட்டமிடல். வியாபார உத்தி என்று சொல்லலாம்.
போலி பட்ஜெட்டோ, போலி வசூல் கணக்கோ, கொடுக்கிற வேலை அவர்களிடம் வேலைக்கு உதவாது.
சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘ஜெயிலர்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், இப்போது 450 கோடி பட்ஜெட்டில் ‘ஜெயிலர்-2’ தயாரிக்கிறது.
‘ஜெயிலர்-1’ நல்ல வசூல் தந்ததால் ரஜினிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்தார் கலாநிதி மாறன். அந்த மகிழ்ச்சியுடன் ‘ஜெயிலர்-2’வை தயாரிக்கிறது.
சம்பளத்தை உயர்த்திய அனிருத்
ஆண்டுதோறும் கால்ஷீட் விலைவாசி உயர்வதால் ‘ஜெயிலர்-1’க்கு ரூ.10 கோடி, ‘கூலி’க்கு ரூ.15 கோடி, ‘ஜெயிலர்-2’க்கு ரூ.18 கோடி என சம்பளத்தை உயர்த்திவிட்டார் அனிருத்.
‘ஜெயிலர்’ முதல் பகுதியில் நடித்த நட்சத்திரங்கள் பெரும்பாலும், ‘ஜெயிலர்-2’ இரண்டாம் பகுதியிலும் தொடர்கிறார்கள். இருப்பினும் சில மாற்றங்கள் இருக்குமாம்.
உதாரணத்திற்கு, கன்னட நாயகன் ஷிவ்ராஜ்குமார் ‘ஜெயிலர்-1’ படத்தில் ரஜினி குடும்பத்தைக் காக்கும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு ஓய்வில் இருக்கிறார். அவர் ‘ஜெயிலர்-2’ல் இடம்பெற வாய்ப்பில்லை.
அதனால்தான், அவரது வேடத்தில் தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கிறார்.
கமல்ஹாசனின் களஞ்சியம் உதயநிதி
பட்ஜெட்டில் நியாயம், பட்ஜெட்டில் கைவைக்காமல் செயல்பட்டால் அது கைவிடாது... வரவேற்பைப் பெறும்.
கமல்ஹாசனின் களஞ்சியம் உதயநிதி என்றுதான் சொல்ல வேண்டும்.
கமலின் ராஜ்கமல் நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ‘தக் லைஃப்’ என்ற படத்தைத் துவங்கினர்.
ஆனால், கமலின் அரசியல் பணி காரணமாக படம் தடைபட்டதால், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் படத்திலிருந்து விலகினர். அவர்களுக்குப் பதிலாக சிம்புவும் அருண் விஜய்யும் நடிக்கிறார்கள்.
கமல் - மணி கூட்டணியின் ‘நாயகன்’ படம் நாற்பது ஆண்டுகளாகியும் பேசப்படும் படமாக இருக்கிறது. அதனால் ‘தக் லைஃப்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘தக் லைஃப்’ என்றால் குண்டர்களின் கதை. ஆக இதுவும், ‘நாயகன்’ பாணி படம்தான்.
‘நாயகன்’ படத்தில், இளைஞன் - நடுத்தர வயது - முதியவர் என மூன்று காலகட்டங்களில் கமல் நடித்திருப்பார்.
‘தக் லைஃப்’ படத்திலும் கமல் மூன்று விதமாக வருகிறார். இதுவும் பெரிய தொகையில் உருவாகும் படம்தான்.
கமல் கேட்டுக்கொண்டதால் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனமும் படத்தயாரிப்பில் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதனால் தாராள செலவில் தயாராகிறது படம்.
‘தக் லைஃப்’ படத்தின் மின்னிலக்க உரிமம் மட்டும் ரூ.150 கோடிக்கு போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டு செலவு செய்து படம் எடுத்தால், சுவைக்கும். சொதப்பினால் சினிமா இனிமா கொடுத்துவிடும்.

