ஹங்கேரி இசைக்குழுவினரும் பணியாற்றி உள்ள தமிழ்ப் படம் ‘சிட்டுக்குறிஞ்சி’

ஹங்கேரி இசைக்குழுவினரும் பணியாற்றி உள்ள தமிழ்ப் படம் ‘சிட்டுக்குறிஞ்சி’

படம்:

20 Nov 2026 - 4:19 pm

2 mins read

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சிட்டுக்குறிஞ்சி’.

கற்பனையையும் காதலையும் கதைக்களமாகக் கொண்டு, இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கும் புதுமையான திரைக்கதை அமைப்பில் இப்படம் தயாராகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே கிட்டத்தட்ட 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம், கலைநயமிக்க அரங்க அமைப்புகள் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. ஒளிப்பதிவைக் கவனிக்க, மாரா இசையமைத்துள்ளார்.

இசைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக்’ இசைக்குழுவினரும் பணியாற்றியுள்ளனர்.

விழாவில் பேசிய இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தனது கல்லூரி நாள்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி தன்னைத்தானே இயக்கிக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தனது தயாரிப்பு நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளது என்றும் இப்படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க ஊடகங்களின் பேராதரவு அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார் திரு மீனாட்சி சுந்தரம்.

விழாவில் பங்கேற்ற நடிகர் தோழர் எல்.வி. ஆதவன், படத்திற்கு ‘சிட்டுக்குறிஞ்சி’ என அழகான தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் பாராட்டினார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பில் முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் திரைகாண்கிறது.

குறிப்புச் சொற்கள்