சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பதுபோல், சொந்தமாக கோவில் வைத்திருக்கும் திரையுலக கதாநாயகர்கள், கதை நாயகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.
அர்ஜுன் - அனுமார் கோவில்
நடிகர் அர்ஜுன் தனக்குச் சொந்தமான சென்னை போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார்.
இல்லற பந்தத்தில் இருந்தாலும், தீவிரமான பக்தி அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் அர்ஜுன், ஆஞ்சநேயரின் நேசர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மலையில் இருந்து எடுக்கப்பட்ட, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை அவரது பண்ணைத் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது இந்தச் சிலை.
அடிக்கடி தன் குடும்பத்தோடு வந்து, வாயுவின் மகனை வணங்கிச் செல்கிறார் அர்ஜுன்.
விஜய் - பாபா கோவில்
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், ஷீரடி சாய் பாபாவின் பக்தர்.
தொடர்புடைய செய்திகள்
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன் பல்லாண்டுகளாக பாபாவின் பக்தை.
பாபா கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை விஜய்யிடம் சொன்னார் ஷோபா. உடனடியாக சென்னை அசோக் நகரில் இடம் பார்க்கப்பட்டது.
ஆனால் மெட்ரோ ரயில் பாதை அந்த இடத்தில் வருவதால் சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் இடம்பார்த்து, ‘பாபா மந்திர்’ என்றபெயரில் கோவிலைக் கட்டியுள்ளார் விஜய்.
பாபா கோவிலில் சிறிய ஆஞ்சநேயர், பிள்ளையார் தனித்தனி சந்நிதிகளில் இருக்கிறார்கள். தன் பல நாள் கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் விஜய்யின் தாயார்.
யோகி பாபு - வாராகி அம்மன்
மாமன்னர் ராஜராஜ சோழனால் வணங்கப்பட்ட தெய்வம் வாராகி அம்மன்.
உடல் அம்மனாகவும் முகம் மட்டும் பன்றி வடிவிலும் இருப்பது இத்தெய்வத்தின் சிறப்பு.
நாளாவட்டத்தில் வாராகியை வணங்கும் வழக்கம் மறந்து, மறைந்துபோனது. இ்ப்போது மீண்டும் வாராகி வழிபாடு பிரபலமடைந்திருக்கிறது.
தீவிர முருக பக்தனான நடிகர் யோகி பாபு, வாராகி அம்மனையும் வழிபடுவார். தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம்பேடு கிராமத்தில் வாராகி அம்மனுக்கு கோவில் கட்டியுள்ளார் யோகி பாபு.
லாரன்ஸ் - ராகவேந்திரர் கோவில்
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ராகவேந்திரா சுவாமிகளின் தீவிர பக்தர்.
(தமிழகத்தில் பிறந்து, கர்நாடகாவில் ஜீவசமாதியான ராகவேந்திரர், தன் வாழ்வில் திருப்பம் தந்தவர் என ரஜினி பலமுறை சொல்லியிருக்கிறார்.)
ராகவேந்திரருக்கு கோவில் கட்ட விரும்பிய லாரன்ஸ், சென்னை அம்பத்தூரில் இடம் வாங்கி அதைச் செயல்படுத்தினார்.
இந்த ராகவேந்திரர் கோவிலினுள் சாய் பாபா சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக பக்தர்கள் வணங்கி வரும் இந்த கோவில், மிகவும் பிரபலமாக உள்ளது.
லாரன்ஸ் - தாயார் கோவில்
ராகவேந்திரா கோவில் வளாகத்திலேயே தனது தாயார் கண்மணியைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கும் கோவில் கட்டியுள்ளார் லாரன்ஸ்.
13 அடி உயர காயத்ரி தேவி சிலை நிறுவப்பட்டு, அதன் கீழே ஐந்தடி உயர தாயாரின் சிலையை, வெள்ளைப் பளிங்கால் ராஜஸ்தானில் செய்யச்சொல்லி, கொண்டுவந்து இங்கே பிரதிர்ஷ்டை செய்துள்ளார் லார்ன்ஸ்.
“நான் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக முடியாது. ஆனால் என் சிறு வயதில் இருந்தே எம்ஜிஆரின் நல்ல பாடல்களை எனக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தார் எம்ஜிஆரின் ரசிகையான எனது தாய். எனவே, எம்ஜிஆர் எனும் பெருவெள்ளத்தில் ஒரு துளியாக இருப்பேன்,” என்கிறார் லாரன்ஸ் ராகவேந்திரா.
எம்ஜிஆர் - அம்மா ஆலயம்
எம்ஜிஆர் தனது ராமாவரம் வீட்டுத் தோட்டத்தில் தன் தாயார் சத்யபாமாவுக்கு சிறிய நினைவுக் கோவில் கட்டியுள்ளார்.
அவரது மறைவுக்குப் பிறகும் அந்தக் கோவில் சிறப்பாகவே இருக்கிறது. தினமும் வெளியே கிளம்பும்போது அம்மாவின் ஆலயத்தில் வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.
டேனியல் பாலாஜி - அங்காளம்மன் ஆலயம்
மிக இளம் வயதிலேயே மரணமெய்திய ‘காக்க காக்க’ பட வில்லன் டேனியல் பாலாஜி, தன் தாயாரின் விருப்பத்திற்காக, தானும் விரும்பி அங்காளம்மன் ஆலயம் கட்டினார்.
சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் சென்னையை அடுத்த ஆவடியில் இந்த ஆலயத்தைக் கட்டியுள்ளார் டேனியல் பாலாஜி.
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் என முன்னோர் சொல்வதுண்டு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் சொன்னார்கள்.
எதைப் பின்பற்றுவது?
உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை என இதைத்தான் கவியரசு கண்ணதாசன் பாடிவைத்தார்.