2025ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
இதுவரை கோடம்பாக்கத்தில் மட்டும் ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றுள் பெரும்பாலான படங்கள் படுதோல்வி கண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
வசூல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்ற ‘மத கஜ ராஜா’, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகத்தில் நூறாவது நாள் விழா கண்ட ‘டிராகன்’, குடும்பக் கதையாக உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘குடும்பஸ்தன்’, சூரி நாயகனாகக் கொண்டு உருவான ‘மாமன்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த குறிப்பிடத்தக்க படங்கள் எனலாம்.
அதேசமயம், நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் படுதோல்வி கண்டதையும் குறிப்பிட வேண்டும்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்த ‘காதலிக்க நேரமில்லை’, விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் நடித்த ‘நேசிப்பாயா’, அறிவழகன் இயக்கத்தில் ஆதிக் நாயகனாக நடித்த ‘சப்தம்’, சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘ரெட்ரோ’, அதர்வாவின் ‘டிஎன்ஏ’ ஆகிய படங்கள் குறைந்தபட்சமாக போட்ட முதலீட்டை திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மறுபக்கம், ‘விடாமுயற்சி’, ‘வீர தீர சூரன்’, ‘ஏஸ்’, ‘தக் லைஃப்’, ‘குபேரா’ ஆகியவை படுதோல்வி கண்டு, தயாரிப்புத்தரப்பை நிலைகுலைய வைத்தன.
‘தக் லைஃப்’ படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி. ‘விடாமுயற்சி’ படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி. ஆனால், கமல் படத்தின் முதல் வார வசூல் நூறு கோடியைக்கூட தாண்டவில்லை.
இரண்டு முதல் பத்து கோடி ரூபாய் செலவில் உருவான, நூற்றுக்கும் மேற்பட்ட, குறைந்த பட்ஜெட் படங்கள் தோல்வி அடைந்ததைச் சுட்டிக்காட்டும் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள், இந்தத் தோல்விகளால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தைத் தயாரிப்பாளர்கள் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.
சரி, அந்த நஷ்டத்தின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும்?
இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களுக்காக தயாரிப்பாளர்கள் ரூ.1,500 கோடி செலவிட்டதாக எடுத்துக்கொள்வோம்.
அதேபோல், குறைந்த செலவில் உருவான படங்களுக்குச் செலவிடப்பட்ட தொகை ரூ.500 கோடி என்று கணக்கிடலாம்.
ஆக மொத்தம், நடப்பாண்டு தமிழ்த் திரையுலகத்தில், ரூ.2,000 கோடி செலவில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வசூல் என்று கணக்கிடும்போது, ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரைதான் இருக்கும் என்கிறார்கள் விநியோகிப்பாளர்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், குறைந்தபட்சம், 800 முதல் அதிகபட்சம் 1,200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
நடப்பாண்டில், ஜனவரி மாதம் வெளியான ‘மத கஜ ராஜா’ படத்தின் வெற்றியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார் அதன் நாயகன் விஷால்.
“இறைவன் இப்பட வெளியீட்டைத் தாமதப்படுத்தினாலும், ஒரு நல்ல நேரத்தைத் தேர்வு செய்து, குறிப்பாக, ஒன்பது நாள்கள் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் இந்தப் படத்தை வெளியிடச் செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஷால்.
பிப்ரவரி மாதம் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறாது என்ற கோடம்பாக்க மூடநம்பிக்கையைத் தவிடுபொடியாக்கி, திரையரங்கில் நூறு நாள்களைக் கடந்து வசூலை வாரிக்கொட்டியது ‘டிராகன்’ படம்.
மே மாதம், சூர்யாவின் ‘ரெட்ரோ’, சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஒரே சமயத்தில் வெளியாயின.
சூர்யா படத்துடன் மோதலாமா என்று பலரும் கூறிய நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வசூல் சாதனை படைத்தது. தயாரிப்பாளருக்கு மூன்று மடங்கு லாபத்தைக் கொடுத்த படம் இது.
சூரி நாயகனாக நடித்த ‘மாமன்’ திரைப்படமும் பத்து கோடி ரூபாய்க்கு மேல் வசூல் கண்டதாகச் சொல்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜின்ஸ் இயக்கி, நவீன் சந்திரா நடித்த ‘லெவன்’, சிபிராஜ் நடித்த ‘10 ஹவர்ஸ்’, திகில் படமான ‘மர்மர்’ ஆகிய படங்களுக்கு திரையரங்குகளில் ஆதரவு கிடைக்காவிட்டாலும், ‘ஓடிடி’, செயற்கைக் கோள் - மின்னிலக்க உரிமங்கள், மற்ற வியாபாரங்கள் மூலம் லாபம் கண்டுள்ளதாகத் தெரிகிறது.
திரையுலகம் ஏராளமானோருக்கு கனவுலகமாக காட்சி தருகிறது. இங்கு மனம் நிறைந்த, கைகொள்ளா கனவுகளோடு நுழையும் அனைவருமே வெற்றி பெறுவதில்லை.
ஆனால், இந்த மாய உலகத்தை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.