திரைப்படத் தயாரிப்பாளர் எம் ஏ வேணு, எம் ஏ வி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாகத் தயாரிக்க இருந்த படம் சிவலீலா. ஆனால், ஏனோ அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாமல் போனது.
அந்தக் கதையை அவரிடமிருந்து வாங்கினார் தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தா எனப் பல பொறுப்புகளை திறம்பட வகித்த ஏ பி நாகராஜன். அதை அவர் திருவிளையாடல் எனப் பெயரிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். அது மட்டுமல்ல அந்தப் படத்திற்கு அவர் நடிகையர் திலகம் சாவித்திரி, நாகேஷ், பாலையா, முத்துராமன், தேவிகா, டி ஆர் மகாலிங்கம், கே பி சுந்தரம்பாள் போன்ற பொறுத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து அவர்களை அருமையாக நடிக்க வைத்திருந்தார்.
படத்தின் காட்சிகள், உரை நடை, நடிப்பு, பாடல்கள், இசையமைப்பு, என அனைத்து அம்சங்களும் சிறப்புற அமைந்திருந்தன. அந்தப் படத்தில் நாகேஷுக்குக் கிடைத்த தருமி என்ற ஏழைப் புலவனின் பாத்திரம் அவருக்கு என்றே உருவானதுபோல் இருக்கும். படத்தில் ஞானப்பழத்தை தமது மூத்த புத்திரன் பிள்ளையாருக்கு வழங்கியதால் கோபித்துக்கொண்டு மலைமேல் ஆண்டிக் கோலம் பூண்டு வீற்றிருக்கும் முருகன் ஔவையின் பேச்சையும் கேளாமல் கைலாயத்திற்குத் திரும்ப மறுக்கிறார்.
அவரைச் சமாதானம் செய்ய எண்ணும் பார்வதிதேவி, சிவபெருமானின் லீலைகளை விவரிக்கிறார். அதில் முதல் கதையாக வருவதுதான் ஏழைப் புலவன் தருமியின் கதை. பெண்கள் கூந்தலில் இருக்கும் மணம் இயற்கையிலானதா இல்லை வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வதால் ஏற்படும் ஒன்றா என்ற பாண்டிய மன்னனாக வரும் முத்துராமனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடல் தன்னிடம் இல்லையே எனப் புலம்பும் நாகேஷிடம் சிவபெருமானாகத் தோன்றும் சிவாஜி அவருக்குத் தனது கவிதையைத் தர முன்வருகிறார். சிவபெருமான் தனது புலமையைத் தருமி சோதிக்கலாம் என்று கூற, அவரும் ஆவேசத்துடன் தனது புலமையை நிரூபிக்கும் வண்ணம் சிவாஜியைக் கேள்வி கேட்கிறார்.
அந்தக் காட்சி ஒரு தனி அழகு. அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சிவாஜி சரியான பதில் சொல்ல நாகேஷ் பின்னோக்கி உடலை வளைத்து, பின்னர் தயக்கத்துடன் சிவாஜி தரும் கவிதையை வாங்கிக்கொள்கிறார். அப்படியும் அவரது பயம் போகவில்லை. கவிதையைச் சிவபெருமானாக வரும் சிவாஜியிடமே திருப்பித்தர, சிவாஜியும் அவரை வற்புறுத்தி கவிதையைக் கொடுக்கிறார். அப்பொழுதும் தயக்கத்துடன் தடுமாறும் தருமியாக வரும் நாகேஷ், “பரிசு கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன், வேறு ஏதாவது கொடுத்தால்..” என கையை அசைத்து தனக்கு உதை விழுந்தால் என்ன செய்வது எனக் கேட்கிறார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சிவாஜி கூற, நாகேஷ் கவிதையை வாங்கிச் செல்கிறார்.
அரச சபையில் கவிதை தன்னுடையது அல்ல என்று தெரியவந்ததும் விரக்தியில் திரும்பி வரும் நாகேஷை சிவபெருமான் மீண்டும் தன்னுடன் சபைக்கு வரச் சொல்ல அந்தக் காட்சியில் நாகேஷ் ஒரே தாவாக அருகிலுள்ள தூணில் ஏறிக்கொள்வதைப் பார்த்து சிவாஜியே சிரித்துவிட்டார்.
அதன்பின் தலைமைப் புலவராக வரும் ஏ பி நாகராஜனுக்கும், சிவபெருமானான சிவாஜிக்கும் நடக்கும் விவாதம் பொன்னேடுகளில் பொறிக்கவல்லது.
படத்தின் இந்தப் பகுதியில் நாகேஷின் நடிப்பு சிவாஜியை மிஞ்சும் அளவுக்குச் சிறப்பாக அமைந்தது. இது தயாரிப்பாளர், இயக்குநர் ஏ பி நாகராஜனுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாகேஷ் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை சற்றுக் குறைக்கலாமா என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அந்த நேரமாகப் பார்த்து சிவாஜியும் அந்தக் காட்சியைப் போட்டுக் காட்டும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதைக் கேட்ட நாகேஷுக்கு தூக்கிவாரிப் போட்டது. காட்சிகளை வெட்டச் சொல்லி தனது பாத்திரத்தைச் சிறுமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம், சந்தேகம் அவருள் எழுந்தது.
ஆனால், நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக அந்தக் காட்சிகளைப் பார்த்த சிவாஜிக்கு ஏக திருப்தி. நாகேஷ் தன்னை நடிப்பில் மிஞ்சிவிட்டார் என்ற எண்ணம் சற்றும் இல்லாமல், அது சிறப்பாக அமைந்ததற்காக நாகேஷைப் பாராட்டினார். நாகேஷுக்கும் மனதில் இருந்த சஞ்சலம் தீர்ந்து சிவாஜியின் பெருந்தன்மையை எண்ணி வியந்தார்.