தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் ஏழு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் திரையுலகத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. எனினும், கடந்த 2016 முதல் 2022 வரை விருதுகள் வழங்கப்படவில்லை.
தற்போது திரைப்படத்துறையைத் தவிர, சின்னத்திரை விருதுகளும் (2014 -2022 வரை) அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சிறந்த நடிகருக்கான விருதிற்கு விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, சாய் பல்லவி, மஞ்சு வாரியர், லிஜோ மோல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் பெறவுள்ளனர்.
சிறந்த வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகர், நடிகைக்கான பிரிவுகளில் சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘மாநகரம்’, ‘அறம்’, ‘படியேறும் பெருமாள், ‘அசுரன்’, ‘கூழாங்கல்’, ‘ஜெய்பீம், ‘கார்கி’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் சிறந்த இயக்குநர்களாக லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், பார்த்திபன், சுதா கொங்கரா, ஞானவேல், கௌதம் ராமச்சந்திரன், புஷ்கர் காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் சாம்.சி.எஸ், ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி, சந்தோஷ் நாராயணன், தமன், ஜிவி பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
பெண்களை உயர்வாகச் சித்திரிக்கும் படம், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என மேலும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெறும் கலைஞர்களுக்கு ஒரு பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
விருது வழங்கும் விழா பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார்.
தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

