“கிரிக்கெட் வீரர் டோனி, இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஓர் அடையாளப்புள்ளி. டோனி தம்பதியர் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது அந்தப் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியான விஷயம்,” என்கிறார் ஹரீஷ் கல்யாண்.
இவரது நடிப்பில் உருவான ‘லப்பர் பந்து’ தமிழ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
‘பார்க்கிங்’ படத்தை அடுத்து, இதுவும் பெரிய அளவில் பேசப்படும் என்று நம்புவதாகச் சொல்கிறார் ஹரீஷ்.
“என் வாழ்க்கையில் இது அருமையான நேரம். ‘பார்க்கிங்’ நிச்சயம் வெற்றி பெறும் என நினைத்தோம். ஆனால், இந்த அளவுக்கு வெற்றி பெற்றதும் பல மொழிகளில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதும் எதிர்பாராத ஒன்று.
“சினிமா என்பது வெறும் கலை மட்டுமல்ல. மிகப்பெரிய வியாபாரச் சந்தை.
“என் படங்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும். தமிழ் மக்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். நான் காசு பணத்தை மட்டும் குறிப்பிடவில்லை. பலருடைய அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.
“தமிழ் மக்கள்தான் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துள்ளனர்,” என்கிறார் ஹரீஷ் கல்யாண்.
இளைய தலைமுறையின் பெரு விருப்ப நாயகன் என்று ஊடகங்களும் ரசிகர்களும் தன்னைக் குறிப்பிடும்போது, பெரும் மனநிறைவு ஏற்படுவதாகக் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்படங்களை ஏற்க முடியாத அளவுக்கு ஏற்கெனவே பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஹரீஷ்.
சில தோல்விகளுக்குப் பிறகு வரும் வெற்றி பெரும் அதிர்ஷ்டம் என்பர்.
‘எல்ஜிஎம்’ நன்றாக ஓடவில்லை. `ஓ மணப்பெண்ணே’ திரையரங்குகளில் வெளியாகவில்லை. `கசடதபற’ ஆந்தாலஜி படைப்பு என்பதால் சில தரப்பினரின் கவனத்தை ஈர்க்கவில்லை என இவருக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டன.
ஆனால், அனைத்தையும் கடந்து இன்று வசூல் நாயகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
``நல்ல கதைகளும் புது விஷயங்களும் வெற்றி பெறும் நேரம் இது. அதனால்தான் `பார்க்கிங்’, `லப்பர் பந்து’ போன்ற கதைகளைக் கேட்கும்போது மிகுந்த ஆர்வம் ஏற்படுகிறது.
“`லப்பர் பந்து’ கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை. இரு கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஏற்படும் மோதலில் தொடங்கும் கதை, பல்வேறு திருப்பங்களுடன் முடிவடையும்.
“இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கதை சொல்லும்போது இன்னும் அழகாக இருந்தது,” என்கிறார் ஹரீஷ் கல்யாண்.
‘லப்பர் பந்து’ படத்தில், ‘அட்டகத்தி’ தினேஷுடன் இணைந்து நடித்துள்ளாராம்.
அது நல்ல அனுபவங்களைத் தந்ததாகவும் திரையுலகம் குறித்த முதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறுகிறார்.
“தினேஷ் அண்ணா எனக்கு மூத்தவர். ‘குக்கூ’ படத்தில் அவரது நடிப்பைக் கண்டு மிரண்டு போனேன். அவர் எனக்குக் கிடைத்துள்ள புது அண்ணன். அவர் பெரிய அளவில் வளர்ச்சி காண விரும்புகிறேன்,” என்கிறார் ஹரீஷ்.

