தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லண்டனை மயக்கிய தமிழரின் இசை

2 mins read
32763243-b002-42d8-b64a-450b8e7c9f3d
லண்டனில் நடந்த இளையராஜாவின் சிம்ஃபொனி அரங்கேற்றம். - படம்: newstodaynet.com / இணையம்

லண்டன்: தமிழ் திரையுலகில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி உலகளவில் ரசிகர்களை ஈர்த்தவர் ‘இசைஞானி’ இளையராஜா.

இதுவரை 1,000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு இந்திய மத்திய அரசு ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. இதுதவிர தான் இசையமைத்த பல்வேறு திரைப்படங்களுக்காக இளையராஜா எண்ணற்ற விருதுகளை வாரிக்குவித்துள்ளார்.

இளையராஜா இசைக்கு இன்றும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் இசையைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை எனலாம்.

அந்த வகையில், இசை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இளையராஜாவின் முதல் சிம்ஃபொனி இசை அரங்கேற்றம் இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் சனிக்கிழமை (மார்ச் 8) இரவு நடைபெற்றது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கிய சிம்ஃபொனி அரங்கேற்றத்தை அனுபவிக்க உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் திரண்டனர் என்று மாலை மலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெறும் 35 நாள்களில் சிம்ஃபொனியை உருவாக்கிய இளையராஜா, அதனை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற எவென்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்ற சிம்ஃபொனி அரங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெய்மறந்து இசை வெள்ளத்தில் மூழ்கினர்.

முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு காரணமாக அரங்கமே அதிர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்ஃபொனி மட்டும் 45 நிமிடங்களுக்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக அதிக திரைப்படங்களுக்கு இசையமைக்காவிட்டாலும் தமிழ் இசைத் துறையில் இளையராஜாவின் பெயர் ஒலிக்காத நாளில்லை என்றால் அது மிகையில்லை. 70, 80, 90களில் இவர் வழங்கிய இசை முத்துக்கள் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்து வருகின்றன.

காதலுக்கு மெளன ராகங்கள், ஆசை 100 வகை தரும் துள்ளலான பாடல்கள், சோகத்தை வெளிப்படச் செய்து மனச் சுமையை இறக்க உதவும் உதய கீதங்கள் என பலசுவை கானங்களை வழங்கியுள்ள இளையராஜாவின் இசைப் பயணங்கள் என்றும் முடிவதில்லை.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஇளையராஜாஇசைலண்டன்