தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறார்களுக்கான இசை நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டுள்ளார் காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் எஸ்.பி.பி.சரண்.
சிறார்களுக்கான நிகழ்ச்சி என்று நினைத்துத்தான் சாதாரணமாகச் சென்றாராம். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் மிகுந்த அதிர்ஷ்டசாலி என உணர்ந்ததாகச் சொல்கிறார் எஸ்.பி.பி.சரண்.
“நான் மிகவும் சிரமம் எனக் கருதும் பாடல்களைக் குழந்தைகள் மிக எளிதாக, அருமையாகப் பாடுகிறார்கள். அது நமக்கும் நல்ல தூண்டுகோலாக அமைகிறது. நாமும் அப்படிப்பட்ட பாடல்களைப் பாட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிறது,” என்கிறார் சரண்.
குழந்தைகள் பாடுவதைக் கேட்டு ரசிக்காமல் இருக்க முடியாது என்று குறிப்பிடுபவர், தங்கள் வயதுக்கு மீறிய திறமையை குழந்தைகள் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
“ஒரு சிறுவனுக்குப் பேசும்போது வாய் திக்குகிறது. தொடர்ந்து பேச முடியாமல் தவிக்கும் அந்தச் சிறுவனுக்குப் பாடும்போது எந்த பிரச்சினையும் இல்லை. நான் ஒரு கேள்வி கேட்டால் பாட்டு மூலம் அழகாகப் பதில் சொல்கிறான்.
“நான் முறையாக சங்கீதம் கற்கவில்லை. வெறும் கேள்வி ஞானம்தான். அதனால் குழந்தைகள் பாடும்போது அவர்கள் செய்யும் பிழைகளை எளிதில் புரியும் வகையில் சுட்டிக்காட்டி வழிநடத்த முடிகிறது. அந்த நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறேன்,” என்று சொல்லும் எஸ்.பி.பி.சரண், தனது தந்தையின் குரலை செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஒலிக்கச் செய்வதில் விருப்பம் இல்லை என்கிறார்.
“ஒரு தொழில்நுட்பம் இருப்பதால் அதைக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை தற்போது என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் குறிப்பிட்ட ஒரு பாடலைத் தம்மால் பாட முடியாது என மறுத்திருக்க வாய்ப்புண்டு.
“ஒரு பாடலைப் பாடலாமா வேண்டாமா என்பதை பாடகர்கள் முடிவு எடுக்கட்டும். எனவே தொழில்நுட்பம் மூலம் அந்த வாய்ப்பைக் கொடுக்கத் தேவையில்லை. இவ்வாறு நான் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும்,” என்று திட்டவட்டமாகப் பேசும் சரணிடம், எஸ்.பி.பாலாவின் குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் ஒலிக்கச் செய்யலாமே என்று பலரும் கூறினராம். ஆனால் சரண் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“எஸ்பிபி என்கிற மாபெரும் பாடகரின் குரலை வேண்டுமானால் நாம் கொண்டு வந்துவிடலாம். ஆனால் பாடும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை யாராலும் கொண்டுவர முடியாது. அதனால்தான் பொறுப்பான இசையமைப்பாளராக இருந்தாலும்கூட இதுபோன்ற முயற்சிகளுக்கு நான் அனுமதி தருவதில்லை.
“அப்பாவின் குரல் நீடித்து வாழ வேண்டும். அந்த உணர்வு இருக்க வேண்டுமென விரும்புகிறோம்,” என்கிறார் எஸ்.பி.பி. சரண்.