சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. இப்படம் மொழித் திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியின் சிறப்புகளையும் அன்றைய அரசியலை மையப்படுத்தியும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘நமக்கான காலம்’ என்ற பாடல் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ்ப் பதிப்பில் ‘தமிழ் வாழ்க’ என இடம்பெற்றுள்ள வாசகம், தெலுங்குப் பதிப்பில் ‘தெலுங்கு வாழ்க’ என்று மாற்றப்பட்டுள்ளது.
மொழித் திணிப்புக்கு எதிரான படம் என்றும், ‘தமிழ் தீ பரவட்டும்’ என்றும் விளம்பரப்படுத்தப்படும் நிலையில், மாற்று மொழிக்காக அதன் முக்கியத்துவத்தை மாற்றிக்கொள்வது முரண்பாடாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
தெலுங்கு வெளியீட்டிற்காக இவ்வாறு மாற்றப்பட்டிருந்தாலும் படத்தின் மையக்கருத்திற்கு இது எதிராக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் அதிருப்தியும் எழுந்துள்ளது.

