2025 ஆம் ஆண்டின் பத்து சிறந்த திரைப்படங்கள்

5 mins read
b5413fa9-9315-46f2-83f5-d0e9f0734986
இவ்வாண்டு வெளிவந்து பெருவரவேற்பைப் பெற்றா ‘பைசன்’ திரைப்படப் பதாகை. - படம்: இணையம்

இந்த 2025ஆம் ஆண்டில் ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

அதிரடித் திரைப்படம், நகைச்சுவை, காதல், விளையாட்டு, உயிரோவியத் திரைப்படம் எனப் பல்வேறு வகையான படங்கள் வெளியீடு கண்டன. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பெரிய கதாநாயகர்களின் படங்கள் மட்டுமன்றி, மனதை வருடும் உணர்ச்சிப்பூர்வமான கதைகளைக் கொண்ட படங்களும் வெளியாயின.

சில படங்கள் ரசிகர்களைக் கைத்தட்டி ஆர்ப்பரிக்கச் செய்தன. சில படங்கள் அமைதியாக வந்து மனதில் நின்றன. சில படங்கள் வணிகத்தில் வென்றன; சில படங்கள் விமர்சனத்தில் வென்றன.

வர்த்தக ரீதியிலோ, விமர்சன ரீதியிலோ இல்லாமல், ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக, திரைப்படங்களை நேசிக்கும் ஒருவனாக, என்னை அதிகமாகப் பாதித்த, யோசிக்க வைத்த, சிறந்த 10 தமிழ் படங்களின் பட்டியல் இது.

10) குடும்பஸ்தன் (ஓடிடி தளம்: ஜீ5)

2025 ஆம் ஆண்டின் சிறந்த குடும்பப் படமாக அமைந்த குடும்பஸ்தன்.
2025 ஆம் ஆண்டின் சிறந்த குடும்பப் படமாக அமைந்த குடும்பஸ்தன். - படம்: இணையம்

குட் நைட், லவ்வர் என்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் மணிகண்டனுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளையர், தமது வேலை பறிப்போனப் பிறகு, குடும்பத்தைக் கரைசேர்ப்பதற்காகப் படும் சிரமங்களை நகைச்சுவை கலந்து இயல்பாகச் சொன்னபடம் இது.

1990களில் பிரபலமாக வெளிவந்த இயக்குநர் வி. சேகரின் படங்களின் சாயலில், நல்ல திரைக்கதை, பாத்திரப்படைப்புகள் மூலம், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மிக நேர்த்தியுடன் இயக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி.

9) லெவன் (ஓடிடி தளம்: சிம்ப்ளி சவுத்)

‘திரில்லர்’ பாணியில் கவனம் ஈர்த்த லெவன்.
‘திரில்லர்’ பாணியில் கவனம் ஈர்த்த லெவன். - படம்: இணையம்

தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக, ‘திரில்லர்’ பாணிப் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளாது. அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மே மாதம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த படம் ‘லெவன்’.

முதற்பாதியின் கணிப்புத்தன்மை, சுவாரசியம் அல்லாத காதல் காட்சிகள் சற்றுத் தொய்வை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் வரும் முன்கதைக் காட்சிகள், கதையில் ஏற்படும் திருப்பங்கள், அட்டகாசமான இறுதிக்காட்சி ஆகியவற்றின்மூலம் அக்குறைகளை ஈடுக்கட்டி, ஒரு தரமான ‘திரில்லர்’ படத்தை வழங்கினார் அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்.

8) மாரீசன் (ஓடிடி தளம்: நெட்பிளிக்ஸ்)

பெருவரவேற்புடன் வெளியான மாரீசன் திரைப்படம்.
பெருவரவேற்புடன் வெளியான மாரீசன் திரைப்படம். - படம்: இணையம்

நடிகர் வடிவேலு, நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமன்றி குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். அதற்கு மற்றோர் எடுத்துக்காட்டாக இவ்வாண்டு வெளிவந்த படம் மாரீசன்.

மலையாளாத்திலும் தமிழிலும் பிரபலமான, நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து, நினைவாற்றல் குன்றிய முதியவராக, தமது மனைவிக்காகப் பழித்தீர்க்கும் கணவனாகத் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

இயல்பான காட்சிகள் நிறைந்த முதற்பாதி, பழி, வஞ்சம், சோகம், மர்மம் கொண்ட இரண்டாம் பாதியுடன், ஒரு ‘கிரைம் திரில்லர்’ பாணிப் படமாக வெளியானது. இந்தக் கலவை சரியாக ஒட்டவில்லை என்றாலும், படத்தின் திருப்பங்களுடன் ஒரு நல்ல பொழுதுப்போக்குப் படமாக இதனை அமைத்திருந்தார் இயக்குநர் சுதீஷ் சங்கர்.

7) பறந்து போ (ஓடிடி தளம்: ஹாட்ஸ்டார்)

இயக்குநர் ராமின் மற்றொரு பக்கத்தை வெளிக்காட்டிய பறந்து போ.
இயக்குநர் ராமின் மற்றொரு பக்கத்தை வெளிக்காட்டிய பறந்து போ. - படம்: இணையம்

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற உணர்வுப்பூர்வமான படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் ராம், தமது வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, நகைச்சுவையும் நெகிழ்ச்சியும் கலந்து எடுத்தக் குடும்பப் படம், பறந்து போ.

தமது மகனுடன் மேற்கொள்ளும் ஒரு பயணத்தின் மூலம் வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை அறியும் ஒரு தந்தையாக ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் சிவா.

இயல்பான நகைச்சுவை, வசனங்கள், மென்மையான கதையோட்டம் ஆகியவை இப்படத்தை ஓர் இனிய அனுபவமாக மாற்றின.

6) ஹவுஸ் மேட்ஸ் (ஓடிடி தளம்: ஜீ5)

திகில் பாணியில் தொடங்கி உணர்ச்சிப்பூர்வமாகத் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.
திகில் பாணியில் தொடங்கி உணர்ச்சிப்பூர்வமாகத் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ். - படம்: இணையம்

‘கனா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தர்ஷன், காளி வெங்கட், விநோதினி வைத்தியநாதன் ஆகியோரின் நடிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கிய படம் ஹவுஸ் மேட்ஸ்.

புதிதாகத் திருமணமான இணையர் குடியேறும் ஒரு பழைய அடுக்குமாடிக் கட்டடத்தில் நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகள், முதலில் ஒரு திகில் கதையாக ஆரம்பித்து, பின் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு அறிவியல் புனைவு படமாக உருவெடுக்கும் வகையில் இப்படம் அமைந்தது.

வழக்கமான பாதையில் போகாமல், காலம், இழப்பு, மனித உறவுகள் போன்றவற்றை நெகிழ்ச்சியுடன் அணுகும் விதத்தில் ‘ஹவுஸ் மேட்ஸ்’ மாறுபட்ட படமாக அமைந்தது.

5) டிராகன் (ஓடிடி தளம்: நெட்பிளிக்ஸ்)

வசூலிலும், விமர்சனத்திலும் வென்ற டிராகன்.
வசூலிலும், விமர்சனத்திலும் வென்ற டிராகன். - படம்: இணையம்

சில படங்கள், வசூல்ரீதியில் வெற்றி பெற்ற அளவு விமர்சனரீதியில் வெற்றி பெறாது. சில படங்கள், விமர்சனரீதியில் வெற்றி பெற்ற அளவு வசூல்ரீதியில் வெற்றி பெறாது. ஆனால் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன், இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்ததுடன், சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.

சிக்கல் நிறைந்த குணம் கொண்ட கதாநாயகன், வெற்றிக்கான குறுக்கு வழிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை எவ்வாறு உணர்கிறான் என்பதைக் காட்டும் ஒரு சமகால கதை டிராகன்.

சுவாரஸ்யமான திரைக்கதை, துள்ளலான இசை, பலவகை ரசிகர்களுக்கு ஏற்றக் கதையோட்டம் ஆகிவை இப்படத்தின் பலமாக அமைந்தன.

4) சிறை

 ‘சஸ்பென்ஸ் திரில்லர்’ பாணியில் வெளியான விக்ரம் பிரபுவின் 25 ஆவது படம் சிறை.
‘சஸ்பென்ஸ் திரில்லர்’ பாணியில் வெளியான விக்ரம் பிரபுவின் 25 ஆவது படம் சிறை. - படம்: இணையம்

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவந்த இப்படம், நடிகர் விக்ரம் பிரபுவின் 25-ஆவது திரைப்படம். நடிகரும், ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குநருமான தமிழின் கதை, கூடுதல் திரைக்கதையில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜாகுமாரியின் இயக்கத்தில் இப்படம் வெளியானது.

ஒரு காவல்துறை அதிகாரிக்கும் ஒரு கொலைக் குற்றவாளிக்கும் இடையிலான ஒரு கதையை ஒரு ‘சஸ்பென்ஸ் திரில்லர்’ சூழலைத் தரும் படமாக, கவனத்தை ஈர்த்தது.

எளிமையான கதையோட்டத்துடன், இயல்பான திரைக்கதை, பாத்திரப் படைப்பு, மத வேற்றுமைகள், சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம், அதிகாரத்தின் முறையற்றுப் பயன்பாடுகள் போன்ற சமூக உணர்வுகளைக் குறித்து வலுவாகப் பேசி மக்களைப் இப்படம் கவர்ந்தது.

3) டூரிஸ்ட் ஃபேமிலி (ஓடிடி தளம்: சிம்ப்ளி சவுத்/ ஹாட்ஸ்டார்)

இவ்வாண்டின் ஆகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இப்படம், தமிழ்நாட்டில் தங்குமிடம் தேடும் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியது.

இப்படம் எளிமையான, மிகவும் மேலோட்டமான ஒரு கதையம்சத்தைக் கொண்டிருந்தாலும், இயல்பான பாத்திரப்படைப்பு, நகைச்சுவை, கண்கலங்க வைக்கும் பல உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள், தொய்வற்ற திரைக்கதை, இனிமையான இசை ஆகியவை மூலம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிலைத்து நின்றது.

2) மெட்ராஸ் மேட்னி (ஓடிடி தளம்: சிம்ப்ளி சவுத்)

நடுத்தர மக்களின் வாழ்வியலைப் பேசிய மாறுபட்ட படம் மெட்ராஸ் மேட்னி.
நடுத்தர மக்களின் வாழ்வியலைப் பேசிய மாறுபட்ட படம் மெட்ராஸ் மேட்னி. - படம்: இணையம்

நடுத்தர வர்க்க மக்களின் கதைகளைப் பற்றி 2025-ல் பல படங்கள் பேசியிருந்தாலும், அவற்றில் தனித்துவமாக நின்ற படம், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி எழுதி இயக்கிய ‘மெட்ராஸ் மேட்னி’.

சென்னை நகரின் நடுத்தர வாழ்வின் பிளவுகளுக்குள்ளே இருக்கும் உண்மைகள், சிக்கல்களை வெளிப்படுத்துவதுடன், திரைக்கதை, இயல்பான கதாபாத்திரங்கள் நிறைந்த ஓர் அழகான உலகிற்குப் பார்வையாளர்களை இட்டுச் சென்றது இப்படம்.

சத்யராஜ், காளி வெங்கட், ஷெலி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் போன்றோரின் சிறந்த நடிப்புடன் இப்படம் கவனம் ஈர்த்தது.

1) பைசன் காளமாடன் (ஓடிடி தளம்: நெட்பிளிக்ஸ்)

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ படங்களைத் தொடர்ந்து இந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின்மூலம், தமது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சாதியப் பாகுபாடு, குழுத் தகராறுகள், தீண்டாமை ஆகியவற்றைத் தாண்டித் தமது விளையாட்டுத் திறமையால் வெற்றிபெறும் வீரனின் கதை இது.

அர்ஜுனா விருது வென்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இயக்குநர் மாரி செல்வராஜ் தமது வழக்கத்துக்கு மாறாக, சற்றே கூடுதல் வன்முறைக் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார்.

சிறந்த திரைக்கதை, துருவ் விக்ரம், பசுபதி, லால், இயக்குநர் அமீர், அருவி மணி, ரஜிஷா விஜயன் போன்றோரின் திறமையான நடிப்பு, நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை, சிறப்பாகப் படமாக்கப்பட்ட கபடி காட்சிகளுடன் இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்