அறிமுக இயக்குநர் சுரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம்.
இதில் அன்சன்பால், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முழுநீள காதல் படங்கள் குறைந்துவிட்டதாகப் பலரும் கூறிவரும் நிலையில், அந்தக் குறையைப் போக்கும் விதமாக உருவாகியுள்ளதாம் இந்தப் படம்.
மனதை வருடும் மெல்லிசை, கவிதை போன்ற காட்சிகள், இனிமையான காதல் பாடல்கள் எனக் கிட்டத்தட்ட 1990களில் வெளியான காதல் படங்களைப் போல் ‘மழையில் நனைகிறேன்’ படம் இருக்கும் என்று படக்குழுவினர் உறுதி அளிக்கின்றனர்.
“காதல் என்றாலே மழை மாதிரி அழகானது. காதல் மழையில் நனையாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு மழையின் கதைதான் இந்த ‘மழையில் நனைகிறேன்’ திரைப்படம்,” என்று தலைப்புக்கான காரணத்தை விவரிக்கிறார் சுரேஷ் குமார்.
“ஒரு பெண்ணும் இளைஞனும் திடீரென நேரில் சந்திக்கும்போது அந்த இளைஞன் மனதில் காதல் மலர்கிறது. அதை அந்த பெண்ணிடம் கூறும்போது அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அந்த பெண்ணுக்கும் காதல் எண்ணம் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.
“நாயகி ரெபா மோனிகா ஜான் திகில் படத்தில் நடித்து முடித்த கையோடு அவரை இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர். கதை கேட்ட உடனேயே மிகவும் பிடித்திருப்பதாக கூறி கால்ஷீட் ஒதுக்கினாராம்.
“ரெபா மோனிகாவைப் பொறுத்தவரை, எண்ணிக்கைக்காக படங்களில் நடிப்பதில்லை. இது ரசிகர்களுக்கும் தெரியும். இதுவரை அவர் நடித்துள்ள படங்களின் அடிப்படையில் இவ்வாறு துணிச்சலாக கூறலாம். இந்தக் காதல் படத்துக்கு அவரது முகம் மிகப் பொருத்தமாக இருந்தது. அதனால்தான் ஒப்பந்தம் செய்தோம்.
தொடர்புடைய செய்திகள்
“அதேபோல் நாயகன் அன்சன்பாலும் நல்ல நடிகர். இந்த இளம் ஜோடியை முழுமையாக நம்பித்தான் மொத்த கதையையும் அவர்களுடைய கதாபாத்திரங்கள் மீது சுமத்தியுள்ளேன்.
அன்சன் இதற்கு முன்பு ‘ரெமோ’, ‘தம்பி’, ‘90 எம்எல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
“யாருக்கும் எந்தவிதமான அறிவுரையையும் இந்தப் படம் வழங்காது. நாயகி ரெபாவின் அறிமுக காட்சியில் தொடங்கி, படத்தின் இறுதிக்காட்சி வரை ஏதாவது ஒரு கட்டத்தில் மழை பெய்தபடி இருக்கும். அதற்காக தேவையில்லாமல் மழை பெய்வதாக சித்திரிக்கப்படவில்லை.
“எனினும் இறுதிக் காட்சியில் தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஒரு காரணம் கூறப்பட்டிருக்கும்.
“மழை அழகானது. காதலும் அப்படிப்பட்டதுதான். மென்மையான ஒரு காதல் கதையை எதிர்பார்த்து திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள்,” என்கிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.
இந்தப் படம் வெற்றி அடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கும் காணொளி அண்மையில் வெளியானது.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு அவர் வாழ்த்து கூறியது பெரிய விஷயம் என்கிறார் இயக்குநர்.
இதன் மூலம் இப்படத்தின் வெற்றி 50 விழக்காடு உறுதியாகிவிட்டதாக படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது.
இந்தப் படத்தின் ஒரு பாடல் காணொளி அண்மையில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, டிசம்பர் 12ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். எனினும் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போய்விட்டது.
அநேகமாக, வரும் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.