ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘தேவரா’ படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில் கிடா வெட்டி அதன் ரத்தத்தை வைத்து ‘தேவரா’ பட பதாகைகளுக்கு ரசிகர்கள் ரத்த அபிஷேகம் செய்தனர்.
இந்நிலையில், நடிகை வேதிகா இச்செயல்பாட்டைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
“இது மிகவும் கொடுமையான செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்துகிறது. இதுபோன்ற சித்திரவதை யாருக்கும் நடக்கக்கூடாது. ஓர் அப்பாவி உயிரை இப்படியா வதைப்பது.
“அந்தக் குழந்தை இறைவனின் கைகளில் தஞ்சமடையட்டும். இது போன்ற கொடுமைகளை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்,” என்று வேதிகா தமது சமூக ஊடகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செயல்களை பெரிய நடிகர்கள் அனுமதிக்கக்கூடாது என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் தரப்பில் இருந்து, வேதிகாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அபிமான நாயகனின் மீதான அன்பை வெளிப்படுத்தும் செயல்களைக் கண்டிப்பது தவறு என்று ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

