கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் திரைக்கதை எழுதும் பணி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் படப்பிடிப்புத் தொடங்க உள்ளனர்.
படப்பிடிப்புக்கான வேலைகளைத் தாமே முன்னின்று கவனித்து வருகிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.
தயாரிப்புக்கு முந்தைய பணிகள் அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று தனது குழுவிடம் கறாராக கூறிவிட்டாராம். அதனால் மொத்த படக்குழுவும் பம்பரம்போல் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் முக்கியமான காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.
மற்றொரு பக்கம் அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் உருவாகி வருகின்றன. இரண்டும் அனல் பறக்கும் பாடல்களாக இருக்குமாம்.
அவற்றுள் ஒன்று ரஜினியின் அறிமுகப் பாடல் என்பதால் ரசிகர்கள் மத்தியில், அப்பாடல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியைத் திரையில் பார்க்கும்போது அசத்தலாக இருக்கும் என்பது கூடுதல் உற்சாகம் தரும் தகவல்.
இதற்காக ஹாலிவுட்டில் இருந்து இரண்டு ஒப்பனைக் கலைஞர்களை அழைத்துவரத் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ‘ஜெயிலர்-2’ படம் திட்டமிட்டபடி வெளியாகும் எனத் தெரிகிறது. படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் அண்மைய பாராட்டால் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, மரியாதை நிமித்தம் நலம்விசாரித்தார் ரஜினி.
அப்போது, ‘ஜெயிலர்-2’ வெளியீடு குறித்து பிரேமலதா விசாரிக்க, விரைவில் வெளிவரும் என்று பதிலளித்த ரஜினி, நெல்சன் நல்ல, திறமையான இயக்குநர் என்று கூறினார்.
இதுதொடர்பான காணொளி, சமூக ஊடகங்களில் வெளியானதுதான் நெல்சனின் உற்சாகத்துக்குக் காரணம்.
இதனிடையே, ‘தலைவர்-173’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது இந்தி நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

