‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. விஜய் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடுகின்றனர்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ அவரது கடைசிப்படம் எனக் கூறப்படுகிறது. முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், கடைசிப் படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்துக்காக அனிருத் அமைத்த மெட்டு, விஜய்யைக் கவர்ந்துவிட்டதாம். எனவே, அனிருத்துடன் இணைந்து பாட முடிவு செய்தார்.
‘தளபதி கச்சேரி’ எனத் தொடங்கும் அந்த முதல் பாடல் நவம்பர் 8ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியானது.
இந்தக் காணொளியில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இப்பாடலை விஜய், அனிருத்துடன், பாடகர் அறிவும் இணைந்து பாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

