தமிழ் சினிமாவில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரே சமயத்தில் இரு பெரிய படங்கள் திரையில் வெளியாகியுள்ளன. விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணியில் ‘தங்கலான்’ படமும் அருள்நிதி, அஜய் ஞானமுத்து கூட்டணியில் ‘டிமான்டி காலனி 2’ படமும் திரையில் வெளியாகியுள்ளன.
‘தங்கலான்’ உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்களையும் ‘டிமான்டி காலனி 2’ திகிலூட்டும் கதைகள், பேய்ப் படங்களை ரசிக்கும் ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் வித்தியாசமான பாத்திரத்தில் மிரட்டியுள்ள ‘தங்கலான்’ படம் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
‘பிதாமகன்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற விக்ரமுக்கு ‘தங்கலான்’ படம் ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படம் ஆஸ்கர் கதவைத் தட்டுவது நிச்சயம் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் படத்தைக் காண திரையரங்குக்குத் திரண்ட ரசிகர்களில் சிலரும் ‘தங்கலான்’ விருதுகளை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளனர்.
விடுமுறை நாள் என்பதால் ‘தங்கலான்’ படத்தின் முதல் நாள், முதல் காட்சியைக் காண விக்ரம் ரசிகர்கள் குவிந்ததால் திரை யரங்குகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. திரும்பும் பக்கமெல்லாம் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சீயான் விக்ரமின் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, திரையரங்கு வாசலில் பட்டாசு வெடித்து திருவிழாபோல் கொண்டாடினர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கம்போல் இப்படத்திலும் விக்ரம் தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். ‘தங்கலான்’ திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்வதால் படத்தைப் பார்க்க சற்று பொறுமை அவசியம் என்றும் ரசிகர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
எனினும், படம் உலகத்தரத்தில் இருப்பதால் உலக சினிமா ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ‘டிமான்டி காலனி 2’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இருக்கும் தொடர்பை இயக்குநர் சிறப்பாக காட்டியிருப்பதாகவும் இடைவேளை காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
திகிலூட்டும் கதைகள், பேய்ப் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு ‘டிமான்டி காலனி 2’ விருந்தாக அமையும் எனக் கூறப்படுகிறது.
விக்ரமின் நடிப்பை பார்த்தால் மிரட்டலாக இருக்கிறது. படம் பிரம்மாண்டமாக உள்ளது. நீண்ட நாள் காத்திருந்ததற்கு விக்ரம் அருமையான படத்தைக் கொடுத்துள்ளார்.
சண்டைக்காட்சிகளில் விக்ரம் காட்டிய உழைப்பு அபாரமானது என சிலர் கருத்து தெரிவித்துள்ளதுடன் “தேசிய விருதுக்குத் தகுதியான உழைப்பு,” என சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முதல் பாதி பயங்கரமாக உள்ளது. புல்லரிக்க வைத்துவிட்டார்கள். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. படத்தைச் செதுக்கியிருக்கிறார் பா. ரஞ்சித். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசை அருமை என தெரிவித்துள்ளனர்.
‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ள விக்ரமுக்கு விருது கொடுக்கப்பட வேண்டும். இரண்டாம் பாதி சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல திரைக்கதை, வெற்றிபெறும் எனக் கூறியுள்ளனர்.
‘தங்கலான்’ என்பது ஒரு பழங்குடி இனத் தலைவனின் பெயர் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.