அண்மையில், ‘அமரன்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
‘அமரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவி அந்நிகழ்ச்சியில் பேசிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அவர் பேசிய சில தகவல்களை இங்கு காணலாம்.
“படத்தில் வரும் வசனம், இசை, சண்டை, கோபம் எல்லாவற்றையும் திட்டமிட்டது இயக்குநர் ராஜ்குமார்தான். ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மற்றொருவர் கதையாக எழுதுவது மிகவும் கடினம். ராஜ்குமார் அதை எப்படி செய்தார் எனத் தெரியவில்லை,” என்றார் சாய்பல்லவி.
“என் திறமையை வெளிக்காட்டவும் நானாக இருக்கவும் எனக்குச் சிறிது இடம் வேண்டும். அது எனக்குள் இருக்கும் நடிகையை வெளியே கொண்டுவர மிகவும் முக்கியம். அப்படியொரு சுதந்திரத்தை ‘அமரன்’ படத்தின் இயக்குநர் எனக்கு அளித்தார்,” என அவர் அப்படத்தின் வெற்றி விழாவில் கூறினார்.
அதுதான் எனக்கு அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நன்றாக நடிக்க உதவியது எனக் கூறிய அவர், “இந்தித் திரையுலகில் நிறைய ராணுவப் படங்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கோணத்தில் இனி வெளிவரும் படங்களுக்கு ‘அமரன்’ ஒரு பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. அதற்குக் காரணம் ராஜ்குமாரின் வேலைதான்,” என்றார்.
“தீபாவளியன்று வெளியான படத்தைக் காண வரும் ரசிகர்கள் வீட்டிற்கு அழுதுகொண்டே செல்லவேண்டுமா என விநியோகிப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு நன்றி,” என நெகிழ்ச்சியுடன் கூறினார் சாய்பல்லவி.
“அவரைத் தவிர வேறு யாராலும் இதை நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது. அவர் திரையுலகையும் ரசிகர்களையும் நம்புகிறார். தமிழ்த் திரைப்படங்கள் இன்னும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கும் வளர்வதற்கும் அவர்தான் காரணம்,” எனக் கமலுக்குப் புகழாரம் சூட்டினார் அவர்.
‘அமரன்’ படம் வெளியாகி 100 நாள் ஆகிவிட்டதாகவும் இருப்பினும், சிலர் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அப்படத்தைப் பற்றிப் பேசுவதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் பத்து ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். இதுவரை இப்படி நடந்தது இல்லை. அதற்கு காரணம் அப்படத்திற்காக அனைவரும் 100 விழுக்காடு தங்கள் உழைப்பைத் தந்ததுதான்,” என அவர் தெரிவித்தார்.
“தெலுங்கு ரசிகர்களுக்கு நான் நல்ல நடிகையாகத் தெரிகிறேன். தமிழில் ‘ரௌடி பேபியாக’ மட்டும்தான் தெரிகிறேன். ஏன் நடிகையாகத் தெரியவில்லை எனப் பல நேரம் நான் யோசிப்பேன். அந்தப் பெயரை மாற்றிய ராஜ்குமாருக்கு நன்றி. தமிழ் ரசிகர்களுக்கு சாய்பல்லவியை நடிகையாகக் காட்டிய அனைவருக்கும் நன்றி,” எனக் கூறி தன் பேச்சை முடித்தார் சாய்பல்லவி.

