தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஊடகங்கள், சமூக ஊடகப் பிரபலங்களுக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அண்மையில்தான் தனது காதலர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்துகொண்டார் ராஷ்மிகா.
அதற்குள் புதுமணப் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகாவுக்கும் திருமணம் நிச்சயமானது. ஆனால், நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் சில பிரச்சினைகள் காரணமாகத் திருமணம் நடக்கவில்லை.
இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்மிகாவின் தாயார் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், தன் மகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை ரக்ஷித் ஷெட்டி எதிர்த்ததாகவும் ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததற்காக ரக்ஷித் கடும் கோபம் அடைந்ததாகவும் ராஷ்மிகாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ராஷ்மிகா மன்னிப்பு கோர வேண்டும் என ரக்ஷித் ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதான் ராஷ்மிகாவின் கோபத்துக்குக் காரணம்.
“இதுபோன்ற ஊடகத் தாக்குதல்களைக் கடந்த எட்டு ஆண்டுகளாக நான் எதிர்கொண்டு வருகிறேன். சமூக ஊடகங்கள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள சில தனிநபர்களும் ஊடகங்களும் நான் சொல்லாதவற்றை எல்லாம் நான் சொன்னதாக வெளியிடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“என்னைப் பற்றிய தவறான தகவல்களை என் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் பரப்புகின்றனர். இதையெல்லாம் நான் கவனித்து வருகிறேன். தொடர்ந்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன்.
“ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் இத்தகையவர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிவிட்டன. “பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகத்தினர், தனி நபர்கள், சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் அவற்றை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ராஷ்மிகா மேலும் கூறியுள்ளார்.

