இயக்குநர் ராஜேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய முரளி கிருஷ் இயக்கும் முதல் படம் ‘கருப்பு பல்சர்’. இதில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நாயகனாக நடித்துள்ளார்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது இந்தப் படம். மேலும் காதல், ஜல்லிக்கட்டுப் போட்டி, தேவையான இடத்தில் சண்டைக்காட்சி என மற்ற பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான விகிதத்தில் இருக்குமாம்.
“எப்போதுமே கதையுடன் இயல்பாகக் கலந்திருக்கும் நகைச்சுவைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படிப்பட்ட கதை எனக்கு அமைந்தது. அதனால் கடைக்கோடி ரசிகர்களும் ரசிக்கும்படியான நல்ல படத்தை உருவாக்கி இருப்பதாக நம்புகிறேன்,” என்கிறார் அறிமுக இயக்குநர் முரளி கிருஷ்.
தலைப்பு வித்தியாசமாகவும் ஆங்கிலத்திலும் இருக்கிறதே ?
“பொதுவாக இளையர்களுக்கு எப்படியாவது இருசக்கர வாகனம் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்தக் கதையின் நாயகனும் தன்னிடமுள்ள பழைய வாகனத்தை விற்றுவிட்டு கருப்பு நிற பல்சர் வாகனத்தை வாங்க ஆசைப்படுவார்.
“இதற்காக மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கி பரிசாக கருப்பு பல்சர் வாகனத்தைப் பரிசாக பெறுவார்.
“அதன் பிறகு சில திடீர் திருப்பங்கள் நிகழ, அதற்கான மறுபக்கம் சென்னையில் இருப்பது நாயகனுக்கு தெரியவருகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை,” என்கிறார் முரளி கிருஷ்.
அண்மையில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தினேஷுக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் முக்கியமான இடம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிடுபவர், நடிப்பில் தினேஷ் அருமையாக பங்களித்துள்ளதாகப் பாராட்டுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“தினேஷிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய முகம்தான். அவரை அமைதியான, சாதுவானவராகக் காட்டலாம். அதிரடிக்காரராகவும் மாற்றலாம். காதலில் உருகுபவராக, பைக்கில் சுற்றும் இளையராக, காளையைப் பிடிக்கும் நாயகனாக என எந்தக் கோணத்திலும் அவரைத் திரையில் காட்சிப்படுத்த முடியும்.
“நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல. ஆனால் தினேஷுக்கு இது இயல்பாகவே வருகிறது. முதன்முறையாக அவர் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
“‘தினேஷுக்குள் ஒரு இயக்குநர் இருப்பது பலருக்குத் தெரியாது. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கிறேன். ஒரு கதையை அவரைவிட சிறப்பாக எடை போடக்கூடிய நடிகரை நான் இன்னும் பார்க்கவில்லை.
“தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே வாழக்கூடிய அவரைப் போன்ற திறமையான, நட்பான நாயகன் இருந்தால் ஒரு இயக்குநரால் எதையும் சாதிக்க முடியும். தினேஷின் ஒத்துழைப்பால் மொத்தப் படத்தையும் 23 நாள் களிலேயே முடித்துவிட்டோம்,” என்கிறார் இயக்குநர் முரளி கிருஷ்.
இந்தப் படத்தில் ரேஷ்மா வெங்கட், மதுநிகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் ஆகியோரும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்பராஜ் ராஜேந்திரனின் இசையில் பாடல்கள் அழகான மெட்டுகளில் அமைந்துள்ளன. பாடல் வரிகளும் அருமை. தமிழ்ச் சினிமாவில் நிச்சயமாக வெற்றிவலம் வருவார். பின்னணி இசையை வழங்கியுள்ள ராஜ் பிரதாப் பணியும் பாராட்டுக்குரியது.
“அறிவியல் வளர்ந்து, கைப்பேசிகள் அறிமுகமாகி, நம்மை வேறு இடத்துக்கு கொண்டு போயிருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே வேறு எதுவும் பெரிதில்லை. இந்த வாழ்க்கை உண்மையை படத்தைப் பார்க்கும்போது ஒவ்வொரு ரசிகராலும் நிச்சயம் உணர முடியும்,” என்கிறார் முரளி கிருஷ்.

