தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது: ஜனனி

3 mins read
0ebb7081-334f-47c9-9430-172eff0c9900
ஜனனி குணசீலன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஜனனி குணசீலன் என்றதும் விஜய் ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு முகம் நினைவுக்கு வரக்கூடும்.

‘லியோ’ படத்தில் சில காட்சிகளே வந்திருந்தாலும், நம்மைப் பதற, பரிதாபப்பட வைத்தவர்.

இலங்கைத் தமிழரான இவர், தற்போது இந்தியாவிலும் சின்னத்திரை, வெள்ளித்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார்.

“இலங்கைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்க்கத் தொடங்கினேன். அடுத்து, இந்தியா வந்தபோது அதேபோன்ற வேலைதான் கிடைத்தது. கூடவே, நிறைய நண்பர்களும் கிடைத்தனர்.

“இந்தியாவில் தகவல் தொடர்பு என்பது சிரமமாக இல்லை. திரையுலகம் என்பது கடல் போன்று காணப்படுகிறது.

“சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும்கூட, ஓரளவு நடிக்கும் அளவுக்குத் தேறியிருப்பேன். ஆனால், செய்தி வாசிப்பு, பேட்டி, போட்டி, தொகுப்பாளினி என்று நான் நானாகவே இருந்தேன். அதனால் நடிப்பதற்கென்று கேமரா முன்பு நின்றபோது சற்று சிரமமாகத்தான் இருந்தது.

“கதைப்படி, யாரோ ஒரு பெண்ணைப் போன்று பேசி நடிக்க வேண்டும். கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது,” என்று இலங்கைத் தமிழில் அழகாக கதைக்கிறார் ஜனனி.

இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டே ஆசிரியை பணிக்கான பயிற்சியிலும் சேர்ந்தாராம். தேர்வுகூட எழுதி முடித்த நிலையில், தொலைக்காட்சி நிறுவனத்தில் பகுதி நேர வேலை கிடைத்திருக்கிறது.

“ஒரு கையில் ஆசிரியை வேலைக்கான பணி நியமனக் கடிதம், மற்றொரு கையில் சினிமா வாய்ப்பு என்ற நிலையும் ஏற்பட்டது.

“அப்போது என் மனத்துக்குள் ஒரு குரல் கேட்டது. ‘பள்ளியில் படிக்கும்போதுதான் காலையில் சீக்கிரமாக எழுந்து, அவசர அவசரமாக ஓடினாய். மீண்டும் அதேபோன்ற அவசர வாழ்க்கை தேவையா?’ என்று ஒலித்த குரல் நான் முடிவெடுக்கப் போதுமானதாக இருந்தது. சினிமா முதல் தேர்வாக அமைந்தது,” என்கிறார் ஜனனி.

இவரது தந்தை குணசீலன் ஒப்பந்ததாரர். அம்மா விஜிடா குடும்பத் தலைவி.

‘லியோ’ படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் ‘கறுப்பு’, விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஜனனி.

மூவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதைப் பார்த்து வியந்துபோனாராம்.

“இயக்குநர் குரல் கேட்டதும் ஒரு குழந்தையைப் போல் வந்து, காட்சிக்கு ஏற்ப நடித்துவிட்டுப் போகிறார்கள். ஒரு காட்சி படமாக்கப்பட்ட பிறகும் சூர்யா கேரவனுக்குள் போகமாட்டார். அந்தக் காட்சி சரியாக அமைந்துவிட்டதா என இயக்குநரிடம் கேட்டு, உறுதி செய்துகொண்டு, அங்குள்ள சிறு திரையில் எடுக்கப்பட்ட காட்சியைப் பார்த்த பிறகே செல்வார்.

“இதுபோன்ற செயல்பாட்டை இன்றைய இளையர்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய நடிகர்களாக இருந்தாலும் மூவரும் இயல்பாக, நட்பாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட பணிவாக இருப்பதுதான் என்னைக் கவர்ந்தது,” என்று சொல்லும் ஜனனிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது.

அண்மையில் ஒருமுறை அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஒரு படம் முழுக்க அப்பாவியாக நடித்துவிட்டு, இறுதியில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார்.

“தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் இயக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். நல்ல கதை அமைந்தால் அது தானாகவே பெரிய பட்ஜெட் படமாக மாறிவிடும்.

“எப்போதுமே தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்துதான் ஒரு படத்தில் நடிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. காரணம், பலர் ஆர்வமாகப் படமெடுத்து முடித்தாலும், அதை வெளியிட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

“அடுத்து, மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள ‘டிரெயின்’ படத்திலும், வெற்றிமாறனின் மருமகன் நாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளேன்.

“மேலும், ‘மைனர்’ என்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்திலும் என்னைப் பார்க்க முடியும். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாலும், அதுகுறித்து இப்போது ஏதும் சொல்ல இயலாது,” என்கிறார் ஜனனி குணசீலன்.

குறிப்புச் சொற்கள்