“பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் ரத்தம் கசியத்தான் செய்யும்,” என்கிறார் ‘சொர்க்க வாசல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சித்தார்த் விஸ்வநாத்.
இவர் இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதன்மை உதவி இயக்குநராக அறியப்பட்டவர்.
சிலர் விதவிதமான குற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாமல் பல அப்பாவிகளும்கூட வழக்குகளில் சிக்க நேரிடுகிறது.
“பொய் வழக்குகளின் அணிவகுப்பு தவிர்க்க முடியாததாக உள்ளது. நம் சமூகத்தில் தாங்கள் நிரபராதிகள் என உண்மையை நிரூபிக்க, முட்டி மோதி கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. பேரறிவாளன்கூட இவர்களில் ஒருவர் தான்.
“சிறையில் அடைக்கப்படும் சாதாரண மக்களும்கூட அங்கே வாழ்ந்துதான் ஆக வேண்டும். சிறையில் இருக்கும் வரை ஒருவர் தனது மனநிலையை சரியாக வைத்துக்கொள்வது முக்கியமானது.
“அங்கே உள்ள வார்டன்களின் மனநிலை தனி ரகமாக இருக்கும். வெளியில் உள்ள காவல்துறையினரைவிட சிறையில் உள்ள காவலர்களுக்கு கிடைக்கும் மரியாதை, வசதி ஆகிய அனைத்துமே குறைவாகத்தான் இருக்கும். கைதிகளைப்போலவே இந்தக் காவலர்களும்கூட எப்படியாவது சிறையை விட்டுப்போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்,” என்கிறார் சித்தார்த் விஸ்வநாத்.
சிறையில் வேலை பார்க்க வேண்டுமென்று யாரும் ஆசைப்படுவதில்லை என்று குறிப்பிடுபவர், கைதிகளுக்கான தண்டனைக்காலம் போன்றுதான் இந்தக் காவலர்களின் பணிக்காலம் அமைகிறது.
இந்நிலையில், சிறையில் பணியாற்றும் காவல்துறையினரின் வரம்பு மீறிய அதிகார ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை இந்தப்படம் அலசும் என்று விரிவாகச் சொல்கிறார் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.
தொடர்புடைய செய்திகள்
“கொலை செய்தவர்கள், கடத்தல் பேர்வழிகள், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பவர்கள், ‘பிக்பாக்கெட்’ அடிப்பவர்கள் எனப் பல்வேறு குற்றங்களைச் செய்யும் ஆசாமிகள் சிறைக்கு வருவதாக குறிப்பிடும் இவர், அப்படி வந்து சேரும் குற்றவாளிகளும் எந்தத் தவறும் செய்யாமல் இத்தகைய வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளும்கூட சிறைக்கு வர நேரிடுகிறது. இந்தத் தனி உலகத்தை சரியான விதத்தில் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிதான் ‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை,” என்றும் விளக்கம் அளிக்கிறார்.
இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜிதான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவருக்கு இந்தக் கதை ஒத்துவருமா எனத் தொடக்கத்தில் யோசித்தாராம் இயக்குநர்.
“ஆனால் படத்தில் ஒப்பந்தமான முதல் நொடியில் இருந்து பாலாஜி காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைத்தது. அவரால் எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என இப்போது நான் உறுதியாக நம்புகிறேன்.
“உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்புவரை சென்று எட்டிப்பார்க்கும் முனைப்பு எனக்கு இருந்தது. நேர்மை வெற்றி பெறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நியாயம் என்பது உலகத்துக்கு கண்டிப்பாக புரியும். இனிமேல் வாழ்க்கையைப் பிரதிபலித்தால்தான் சினிமா பேசப்படும் என நினைக்கிறேன்,” என்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.