உருவக்கேலி குறித்தெல்லாம் தற்போது தாம் கவலைப்படுவதே இல்லை என்கிறார் இளம் நாயகி அனன்யா பாண்டே.
திரையுலகில் அறிமுகமாகி ஆறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் உருவெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அண்மைய காணொளிப் பேட்டியில் அனன்யா வெளிப்படையாகக் தெரிவித்த சில கருத்துகளுக்கு இளையர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
“நான் என் பயணத்தைத் தொடங்கும்போது 18-19 வயதிருக்கும். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். எல்லாருமே அதுகுறித்து கிண்டல் செய்தனர். அது வேதனை அளித்தது.
“ஓ... உனக்கு இருப்பது கோழி கால்கள், நீ தீக்குச்சி போல இருக்கிறாய்’ எனப் பலவிதமான கிண்டல்கள் எழுந்தன. பின்னர் உடலில் சற்று சதைபோட்டதும் உருவக்கேலி வேறு வடிவம் எடுத்தது.
“நாம் எப்படி இருந்தாலும், எப்போதும் நம்மை விமர்சிக்க மக்களுக்கு ஏதாவது இருக்கும். குறிப்பாக பெண்களை விமர்சிக்க, ஆண்கள் இதனை அடிக்கடி எதிர்கொள்வதில்லை.
“நம்மைப் பற்றி விமர்சிக்க எப்போதும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். நம்மை விமர்சிக்க யாரேனும் ஒருவர் தயாராக இருப்பார்,” என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அனன்யா.

