ஊருக்கு அள்ளிக் கொடுப்பதாக நடித்துவிட்டு, நேரில் கிள்ளிக்கூட கொடுக்காத கதாநாயகர்களுக்கு மத்தியில் நகைச்சுவை நாயகர்கள் அள்ளிக் கொடுப்பதை, அவர்களின் சாதனைகளை இங்கே பார்ப்போம்!
கவுண்டமணி:
யார் என்ன பேசினாலும் அதற்கு உடனடியாக, ‘கவுண்டர்’ கொடுப்பார் மணி. அதனால்தான் அவருக்கு ‘கவுண்டர்’ மணி என்ற பெயர் வந்து, பின்னர் கவுண்மணியானார்.
கவுண்டரைப் பற்றி பாரதிராஜாவிடம் பாக்யராஜ் சொல்ல, ‘16 வயதினிலே’ படம் கவுண்டருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதிலிருந்து கவுண்டருக்கு ஏறுமுகம்தான். செந்திலை ‘காமெடி பார்ட்னரா’க சேர்த்துக்கொண்டு பட்டையைக் கிளப்பினார். தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
கஷ்டப்படும் துணை நடிகர்கள், பத்திரிகையாளர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார் கவுண்டமணி.
இதில் இன்னொரு வியப்புக்குரிய விஷயம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் தன் மகள் சுமித்ரா, மருமகன் வெங்கடாசலம் மூலம் மாதந்தோறும் உதவி செய்து வருகிறார்.
பல வருடங்களாக இந்த உதவியை யார் செய்கிறார்கள் எனத் தெரியாமல் இருந்தது. சில வருடங்களுக்கு முன்தான் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது.
மயில்சாமி
தன் வீட்டின் முகப்பில் மயில்சாமி எழுதி வைத்திருக்கும் வாசகம் - ‘நல்லவன் வாழ்வான்’.
எம்ஜிஆரின் தீவிர பக்தர். அதனால் எம்ஜிஆர் போலவே கையில் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டுப் போவார்.
மயில்சாமி கதாநாயகனாக நடித்ததில்லை. ஆனால் எண்ணத்தால் அவர் நாயகனாகவே வாழ்ந்தார். மயில்சாமி பற்றி விவேக் சொன்ன ஒரு சுவாரசியமான விஷயம்...
சுனாமியால் தமிழகம் பாதிக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். அந்த மக்களுக்கு உதவ அந்த நேரம் மயில்சாமியிடம் பணம் இல்லை.
அதேசமயம், பாலிவுட்டில் இருந்து விவேக் ஓபராய் இங்கு வந்து மக்களுக்குச் செய்யும் உதவியைப் பாராட்ட நினைத்தார். உடனே, கடலூர் கிளம்பிச்சென்று, விவேக் ஓபராய் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, அவரைச் சந்தித்தார். மயில்சாமிக்கு ஆங்கிலத்தில் பேச வராது.
அதனால், ‘யுவர் ஹெல்ப் சூப்பர்’ (your help super) எனப் பாராட்டிவிட்டு, தன் கழுத்தில் இருந்த எம்ஜிஆர் டாலர் பொறித்த நீளமான தங்கச்சங்கிலியை, விவேக் ஓபராய் கழுத்தில் மாட்டிவிட்டு வந்தார் மயில்சாமி.
சூரி
‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் திரைக்கு வந்த சூரி, அதில் வரும் பரோட்டா சாப்பிடும் போட்டியால் ‘பரோட்டா’ சூரி ஆனார். பலப்பல படங்களில் கதாநாயகனுக்கு இணையாக வெற்றிபெற்றார் சூரி.
‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்திருக்கிறார். எந்தவொரு சினிமா பிரபலமும் சொல்ல மறைக்கும் ஒரு விஷயத்தை சூரி மிக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், “சினிமா எனக்கு நிறைய செய்திருக்கிறது. சினிமாவில் நான் நிறையவே சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்,” எனச் சொல்லியுள்ளார்.
தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்குச் செய்வது, திறமையான இளையர்களை ஊக்குவிப்பது எனப் பல உதவிகளைச் செய்யும் சூரி, இன்னொரு பாராட்டுதலுக்குரிய விஷயத்தையும் செய்துகொண்டிருக்கிறார்.
சூரி நினைத்தால், மதுரை நகரின் முக்கிய இடத்தில் பெரிய உணவகத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால், மதுரை அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள், ‘அம்மன் சைவ உணவகம்’ ஒன்றை நடத்தி வருகிறார்.
நோயாளிகள், ஏழைகள் பயன்பெறும் வகையில் இந்த உணவகம் செயல்படுகிறது.
சூரி பிரியாணி கடை நடத்தியிருந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், மிகக் குறைந்த விலையில், தரமான சைவ உணவுகள் வழங்குகிறா். சைவ உணவக உரிமையாளர்கள் சங்கம் பலவிதமான நெருக்கடிகளை சூரியின் உணவகத்திற்கு அவ்வப்போது கொடுக்கிறது.
ஆனாலும், மக்கள் ஆதரவால் வெற்றிநடை போடுகிறது சூரியின் படத்தைப் போலவே அவரது உணவகமும்.
யோகி பாபு
சேஷ்டைகள் மூலம் பல படங்களில் நம்மை சிரிக்கை வைத்துவரும் யோகி பாபுதான் இப்போது தினசரி பத்து லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்.
‘மண்டேலா’ உட்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
தீவிர முருக பக்தரான யோகி பாபு, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர் சங்க நலிந்த உறுப்பினர்களுக்காக 1,250 கிலோ அரிசியை வழங்கினார்.
விவேக்
வெட்டுவதும் குத்துவதும் கதாநாயகப் பண்பு என ஆகிவிட்ட காலத்தில், ‘சாமி’, ‘திருமலை’ போன்ற படங்களில் பார்வையாளனுக்கு விவேக் கடத்திய விஷயங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை.
அதனால்தான் ஜனங்களின் கலைஞன், சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்டார் விவேக்.
குழந்தைகளின் கல்விச் செலவுக்கு யாராவது உதவி கேட்டு வந்தால், உடனே செய்வார் விவேக். நடிகர் குமரிமுத்துவின் மகள் திருமணத்துக்கு விவேக் செய்தது மனிதநேயத்தின் உச்சம்.
“எனது கடைசி மகளின் திருமணத்துக்கு கையில் பணம் இல்லை. தம்பி விவேக்கை அணுகினேன். இலங்கையில் நாடகம் போட அழைக்கிறார்கள். நான் சென்று வந்தால் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். என் மகளின் திருமணத்தை முடித்துவிடுவேன் என்றேன்.
“சரி... நான் இலங்கை நாடகத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும் என்று அவர் கேட்க, இரண்டு லட்சம் கிடைக்கும் என்றேன்.
அப்படியானாலும் தானும் வருவதாகக் கூறினார். அனைவரும் சென்றோம்.
நாடகம் முடிந்ததும், எனக்கு 50 ஆயிரம் தந்தனர். விவேக்கிடம் பேசியபடி அவரிடம் 2 லட்சம் தரப்பட்டது. அவரோ பணம் இருந்த உறையை பிரிக்கக்கூட இல்லை. அதை அப்படியே என் கையில் கொடுத்து, மகளுடைய திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்றார்.
“எனது அனுபவத்தில் கலைவாணருக்கு பிறகு விவேக்தான் நல்ல மனிதர்” என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் நடிகர் குமரிமுத்து.

