சினிமாவை விட்டு ஓடஓட விரட்டுகிறார்கள்: வசந்த பாலன் ஆதங்கம்

2 mins read
46aaaf58-cc79-4053-aa10-7fb1e575ac6d
வசந்த பாலன். - படம்: இந்தியா டுடே

ஓடிடி நிறுவனங்கள் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களைக் கண்டுகொள்வதில்லை என இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்த பாலன்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் இந்த விவகாரம் தொடர்பாக முகநூலில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில், சிறு தயாரிப்பாளர்களுக்குப் புது கதாநாயகர்களுக்கு, புது இயக்குநர்களுக்குத் திரையரங்கம்கூட கிடைப்பதில்லை எனச் சாடியுள்ளார்.

“ஓடிடி தளங்களும் இல்லை, தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஆதரவும் இல்லை என்ற நிலையில், படத்தை எடுத்து வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியுள்ளது.

“சினிமாவை விட்டு ஓடஓட விரட்டுகிறார்கள். முட்டி மோதி, மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு,” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் வசந்த பாலன்.

“பெரு நிறுவனப் படங்கள், முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்கும் என்றால் இங்கே ஜனநாயகம் எங்கே இருக்கிறது,” என்று கேள்வி எழுப்பியுள்ள வசந்த பாலன், அழகான கவித்துவமான கதை, நல்ல திரைக்கதை என்பதெல்லாம் இங்கே ஓர் பொருட்டே அல்ல என்று தெரிவித்துள்ளார். இதனால் சொந்த நாட்டிலேயே அகதியாக நிற்பது போன்ற சூழல் நிலவுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாகப் படம் இயக்க முடியாத நிலை. ஒருவேளை படம் இயக்கினாலும் எங்கே விற்பது? யாரிடம் கையேந்துவது? எங்கு திரையரங்கு கிடைக்கும் எனத் தெரியாத பரிதாப நிலை.

எனக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகத்தின் 90% தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார் வசந்த பாலன்.

குறிப்புச் சொற்கள்