“எங்கு சென்றாலும், நீங்கள் அஜித் மகளா என்றுதான் என்னிடம் முதலில் கேட்கிறார்கள். அஜித் எப்போதுமே தன்னை உச்ச நட்சத்திரமாக வெளிப்படுத்தவே மாட்டார். மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசுவார்,” என்கிறார் அனிகா சுரேந்திரன்.
அண்மையில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார் இவர்.
‘விஸ்வாசம்’ படத்தில் நடித்த பிறகு, நான் அஜித் மகள் என்றுதான் பலரும் நினைத்தனர். அதனால் அந்தப் படம் எப்போதுமே என் மனதுக்கு நெருக்கமானது.
“இதேபோல் தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன் என்று கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. ஆனால், காலம் எனக்கு இந்த வாய்ப்பை அளித்திருக்கிறது.
“மலையாளத்தில் ஏற்கெனவே நாயகியாக நடித்துவிட்டாலும், தமிழில் அவசரப்படவில்லை. பொதுவாக காதல், நகைச்சுவை நிறைந்த கதைகள் எனக்குப் பிடித்தமானவை.
“தனுஷ் இயக்கும் படத்துக்கான கதாநாயகி தேர்வு நடப்பது அறிந்ததும் நானும் அதில் பங்கேற்றேன். ஆனால், அவர் என்னைத் தேர்வு செய்வார் என நினைக்கவில்லை,” என்கிறார் அனிகா.
தனுஷ் கடினமாக உழைக்கக் கூடியவர் என்றும் எப்போதுமே சினிமா குறித்து மட்டும் யோசிக்கக் கூடியவர் என்றும் குறிப்பிடும் அனிகா, தனுஷ் எந்த ஒரு சமயத்திலும் பதற்றப்பட மாட்டார் என்றும் சொல்கிறார்.
“எந்தவொரு காட்சியிலும் முதலில் நமது பாணியில் நடிக்க அனுமதிப்பார். ஏதும் மாற்றம் இருந்தால் மட்டுமே அவர் நடித்துக்காட்டி, அதைப் பின்பற்றச் சொல்வார். அவர் சொன்னபடி நடித்த பிறகுதான், அவர் அந்தக் காட்சியை எவ்வாறு மெருகேற்றி உள்ளார் என்பதை நம்மால் உணர முடியும்.
“நான் தமிழில் நாயகியாக நடித்த முதல் படத்தில் என்னுடைய நடிப்பு நன்றாக இருப்பதாகப் பலரும் பாராட்டினார்கள். எனினும், இதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இயக்குநர் தனுஷ்தான்.
“ஒருமுறைகூட அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. அவர் நடிக்க வந்த புதிதில், உடனே கேமரா முன்பு நிற்கவைத்து நடிக்கச் சொன்னார்களாம். எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார்.
“ஆனால், எங்களுக்கு அதுபோன்ற சிரமம் ஏற்படக்கூடாது என்பதால்தான் முழு சுதந்திரம் அளித்திருப்பதாகக் கூறியதுடன், எங்கள் உடல் மொழிக்கேற்ப நாங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கான நடிப்பை வெளிப்படுத்த வைத்தார்.
“நான் உட்பட இப்படத்தில் நடித்த பவிஷ், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் எனப் பலரும் தமிழுக்கு புதுமுகங்கள்தான். அதனால் அவரது வார்த்தைகள் எங்களுக்குப் பல வகையிலும் ஊக்கம் அளித்தன,” என்று தனுஷ் புகழ் பாடுகிறார் அனிகா.
இவரது முகம் இன்னும் குழந்தைத்தனமாக இருப்பதாக சிலர் கூறுகிறார்களாம்.
தொடக்கத்தில் உருவக்கேலியும் இதுபோன்ற விமர்சனங்களும் தன் மனதைக் காயப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போதெல்லாம் இந்த விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்கிறார்.
“என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாதவர்களின் வெற்று வார்த்தைகளை நான் ஏன் கவனிக்க வேண்டும்? பகிர்வதற்கு நல்ல விஷயங்கள் இருந்தாலோ அல்லது சிலருக்குப் பயன்படும் என்றாலோ விமர்சனம் செய்யலாம். அவ்வாறு இல்லையெனில் பேசாமல் இருப்பதுதான் நல்லது.
“ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதுமே வரவேற்கத்தக்கவை. ஆனால், ஒருவரைக் கீழே தள்ளிவிட்டு ரசிப்பதுதான் பலரது விருப்பமாக இருக்கிறது,” என்று அனிகாவுக்கு கோபமும் வருகிறது.

