விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சசி இயக்கியிருந்தார்.
பின்னர் இதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்து, நாயகனாகவும் நடித்தார். படத்தை இயக்கியதும் அவர்தான். ஆனால் படம் பெரிதாகப் பேசப்படவில்லை.
இந்நிலையில், சசி இயக்கத்தில் ‘நூறு சாமி’ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதை, வரும் மே மாதம் முதல் தேதியன்று வெளியிட உள்ளனர்.
‘பிச்சைக்காரன்’ மூன்றாவது பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு, ‘நிச்சயம் உருவாகும்’ எனப் பதிலளித்துள்ளார் விஜய் ஆண்டனி.
“மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் போன்று நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். முந்தைய இரு பாகங்களைவிட மூன்றாவது பாகம் பிரம்மாண்டமாக இருக்கும். சரியாகச் சொல்வதானால், ‘கேஜிஎஃப்’ போன்ற பிரம்மாண்டப் படைப்பாக உருவாக்க உள்ளோம்,” என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
எனினும், படத்தை இயக்கப் போவது யாரென்று இதுவரை தெரியவில்லை. விஜய் ஆண்டனி நடித்த 25வது படம் ‘சக்தி திருமகன்’.
திரையரங்கில் சுமாராக ஓடிய இப்படத்துக்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இப்படம் திரைகண்டது.

