அந்த வார்த்தைகளே எனக்கு ஆகப்பெரிய அங்கீகாரம்: ஆதி

அந்த வார்த்தைகளே எனக்கு ஆகப்பெரிய அங்கீகாரம்: ஆதி

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

02 Oct 2026 - 4:09 pm

2 mins read

‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா, ஹர்ஷத்கான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் தேவா கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, கானா இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘கானா கேங்’ என்ற புதிய அமைப்பையும் தளத்தையும் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கானா இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வளர்ந்து வரும் கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான இசைத் தொகுப்புகளை உருவாக்கி திரைக்குக் கொண்டு வருவதே ‘கானா கேங்’ அமைப்பின் நோக்கம் என்றார்.

தேவா முன்னிலையில் ‘கானா கேங்’ அமைப்பின் முதல் நான்கு கானா கலைஞர்களைப் பற்றிய அறிவிப்பும் வெளியானது. கானா இசைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆதி குறிப்பிட்டார்.

“இப்படத்தை இசையமைப்பாளர் தேவாவுக்கு திரையிட்டுக் காட்டியபோது, என்னைக் கட்டிப்பிடித்து நெகிழ்ந்தார். ‘என்னை சார் என்றெல்லாம் கூப்பிடக் கூடாது, அப்பா என்றே கூப்பிடலாம்; அந்த உரிமை உனக்கு இருக்கிறது’ என்றார்.

“கானா இசையைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற மாபெரும் கலைஞரிடமிருந்து கிடைத்த இந்த வார்த்தைகளே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்,” என்று மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டார் ஆதி.

இப்படத்தின் இறுதிக்காட்சியில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கருத்தை, படத்தின் வெற்றியின் மூலம் நிஜ வாழ்விலும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்