‘கங்குவா’ படம் குறித்து வெளியாகும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து சூர்யாவின் மனைவி ஜோதிகா காட்டத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. சூர்யாவின் மனைவியாக அல்லாமல் ஒரு சினிமா காதலராக தாம் அந்தப் பதிவை வெளியிடுவதாகவும் ‘கங்குவா’ திரைப்படம் திரையுலகில் புது அதிசயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு நடிகராக திரைத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான கனவைக் கொண்டுள்ள சூர்யாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ‘கங்குவா’ படத்தின் முதல் அரை மணி நேரம் இரைச்சலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும்பாலான இந்தியப் படங்களில் இருக்கும் குறைபாடுதான்.
“மூன்று மணி நேர படத்தில் அரை மணி நேரம் மட்டுமே அவ்வாறு உள்ளது. மற்றபடி இந்தப் படம் சிறந்த சினிமா அனுபவத்தைத் தருகிறது,” என்று ஜோதிகா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்களும் ஒரு சிலரது எதிர்மறை விமர்சனங்களும் தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு முன்பு பெரும் செலவில் எடுக்கப்பட்ட படங்களில் இடம்பெற்ற பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளுக்கும் இரட்டை வசனங்களுடன் கூடிய வன்முறைக் காட்சிகளுக்கும் ஏன் இந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘கங்குவா’வின் நேர்மை குறித்து ஏன் யாரும் பேசவில்லை? இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள பெண்கள் பங்கு பெறும் சண்டைக்காட்சி உட்பட நல்ல பகுதிகளைப்பற்றி பேச மறந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.
“கங்குவா வெளியீடு கண்ட முதல் நாளில், முதல் காட்சி முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது. ‘கங்குவா’ குழுவின் முப்பரிமாண உருவாக்க முயற்சி பாராட்டுக்குத் தகுதியானது.
“அப்படக்குழுவினர் தங்களுடைய முயற்சிகளை எண்ணி பெருமை கொள்ளலாம். எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்த எதுவும் செய்யவில்லை,” என ஜோதிகா மேலும் தெரிவித்துள்ளார்.