‘கருப்பு’ படத்தின் வெற்றி ஆர்ஜே பாலாஜியை உற்சாகத்தில் மூழ்க வைத்துள்ளது.
அண்மைய நேர்காணல் ஒன்றில் இந்த உற்சாகத்தைப் பகிர்ந்துள்ள அவர், தன் மனத்தில் இன்றுவரை நிறைந்திருப்பவர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மனைவி திவ்யாவைக் கரம்பிடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் அதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் இருவரும் நட்பு பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார் பாலாஜி.
“17 வயதில் தொடங்கிய நட்பும் காதலும் கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்றுவரை தொடர்கிறது. காதலில் வெற்றி என்பது திருமணத்துடன் முடிவதில்லை. அதன்பிறகும் அதே காதலுடன் நீடிக்கும் வாழ்க்கையில்தான் அனைத்தும் உள்ளது.
“என் எல்லா நிலைகளிலும் என் மனைவியின் பங்கு தெளிவாக இருந்திருக்கிறது. காதல் நிறைந்திருக்கும் இடத்தில் வேறு எதற்கும் இடம் கிடையாது என்பது இப்போது புரிகிறது.
“ஒர் உறவை நன்றாக வைத்துக்கொள்ளத் தனி உழைப்பு தேவைப்படும். ‘திருமணமாகிவிட்டதே, அது போதும்’ என்று இருந்துவிட முடியாது. எங்களின் தீராத அன்பும் காதலும் மட்டுமே ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக நகர்த்திக்கொண்டிருக்கிறது,” என்று கூறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
“என் தாத்தாவுடன் செலவிட்ட நாள்கள் முக்கியமானவை. என் மனத்துக்கு நெருக்கமான, மென்மையான மனிதராக இருந்தார். அவரது தலைமுறை குறித்த அத்தனை விஷயங்களையும் அவரின்றி நான் அறிந்திருக்க முடியாது.
“என் கையைப் பிடித்து அழைத்துச் சென்று நிறைய பேசியிருக்கிறார். பெரிய தலைவர்கள் கூட்டங்களில் பேசும்போது என்னைத் தோள்மீது தூக்கிவைத்துக்கொண்டு கேட்க வைப்பார். என்னிடம் ஏதாவது நல்ல விஷயம் இருந்தால் அது அவர் வழி வந்ததுதான்,” என்றும் ஆர்ஜே பாலாஜி நேர்காணலில் மேலும் கூறியுள்ளார்.

