ஆர்யா குறித்து அண்மைக் காலமாக எந்தத் தகவலும் இல்லை. அண்மையில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் மட்டும் தலைகாட்டினார்.
நன்கு விசாரித்தால்தான், மூன்று புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை-2’ படத்தில் நடித்து வந்தார் ஆர்யா. இதற்காக ஏற்கெனவே கட்டுக்கோப்பான உடல்வாகைக் கொண்டுள்ள இவர், அதை மேலும் இரும்புபோல் மாற்றியுள்ளாராம்.
இதற்கிடையே, திடீரென ‘வேட்டுவம்’ என்ற படத்தலைப்பை அறிவித்து, அதற்கான பணிகளைத் தொடங்கினார் ரஞ்சித். இதனால் ‘சார்பட்டா பரம்பரை-2’ படப்பிடிப்பு நின்றுபோனது.
‘வேட்டுவம்’ படத்தில் எதிர்மறை நாயகனாக ஆர்யா நடிப்பதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
இந்நிலையில், ஆர்யா நடிக்கும் அடுத்த படத்துக்கு, ‘ஆனந்தன் காடு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
காட்டை பின்னணியாகக் கொண்டு, அங்கு வாழும் மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம்தான் கதைக்களமாக இருக்கும் என்பது டீசரை பார்க்கையில் தெரிகிறது.
இதில் ஆர்யா அரசுக்கு எதிரான புரட்சியாளராக நடிப்பதாகத் தகவல்.