மும்பையில் சொந்த வீடு வாங்கி, குடியேறி உள்ளனர் சூர்யா, ஜோதிகா தம்பதியர். அங்குள்ள அனைத்துலகப் பள்ளியில் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார் இவர்களின் மகள் தியா. முதலில் சென்னையில் உள்ள பள்ளியிலேயே இவர் படிப்பதாக முடிவாகி இருந்ததாம்.
“ஆனால், என்னால் அம்மாவைப் பிரிந்து இருக்க முடியாது என்பதால் மும்பைக்கே சென்றுவிட்டேன். எனது படிப்பை முடிக்க அம்மாவின் பங்களிப்பு முக்கியமானது,” என்கிறார் தியா.
தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் யாத்ராவும் அண்மையில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழாவில், தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரே நேரத்தில் வந்து, ஒன்றாகவே மகனை உச்சி முகர்ந்திருக்கிறார்கள். இத்தம்பதியர் மீண்டும் இணையும் சூழலை பிள்ளையின் கல்வி ஏற்படுத்தி இருப்பதை எண்ணி இருதரப்பு குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.
நடிகை சிம்ரன் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளார். அவர் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மிகுந்த பாராட்டுப் பெற்று அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், சிம்ரன், தீபக் தம்பதியரின் மூத்த மகன் அதீப் பக்கா தன் பள்ளிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கியுள்ளார். அதீப்பின் குழந்தைப் பருவம் முதல் பட்டம் பெற்றது வரை பல்வேறு புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்ரன்.
“நேற்று எங்கள் கையில் குழந்தையாக இருந்தவன், இன்று பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறான்,” என்று தனது பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிம்ரன்.
திரிஷா வீட்டை வாங்கிய நடிகர்
திரிஷாவுக்கு அடையாறு போட் கிளப் உள்ளிட்ட நான்கு இடங்களில் சொந்த வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒரு வீட்டை விற்றுள்ளார். அந்த வீட்டை வாங்கியவர், நீங்கள் கேட்டவை, வீடு உள்ளிட்ட திரைப்படங்களின் கதை நாயகனான பானுசந்தர்.
அழகோ அழகு
நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கும் நயன்தாரா, தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது பெண்களுக்கான தோற்றப்பொலிவை அதிகரிக்கும் அழகு சாதனங்களை விற்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளாராம்.
ரவி மோகனின் புதிய அவதாரம்
ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் பல படங்களில் வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை தாமே இயக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்பதும் ஏற்கெனவே தெரிந்த தகவல்தான்.
ரவி மோகனின் மூன்றாவது அவதாரம் தயாரிப்பாளர். இதற்காக அவர் கடந்த வாரம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
எந்த நடிகையிடமும் இல்லாத ஒன்று
‘நாகினா’ தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை ஊர்வசி ரௌதெலா புதிதாக சொகுசு கார் வாங்கியுள்ளார்.
‘ரோல்ஸ் ராய்ஸ்’ வகையைச் சேர்ந்த இந்தக் காரின் விலை ஏறக்குறைய ரூ.12 கோடியாம். இந்திய நடிகைகளில் வேறு யாரிடமும் இந்த வகை கார் இல்லை என்றும் இது தமக்குப் பெருமை அளிக்கிறது என்றும் ஊர்வசி கூறுகிறார். கடந்த சில மாதங்களாக மும்பை சாலைகளில் இவர் கறுப்பு நிற ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் பறப்பதைக் கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள்.
விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் நடிகர் விஷால். ஆனால், அந்த இனிமையான செய்தியை அறிவித்த சில நாள்களிலேயே ஓர் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளார். விஷாலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பல கோடி ரூபாய் திரட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எதற்கும் அசராத விஷால், இதுவும் கடந்து போகும் என்று தனது நண்பர்களின் கூறி வருகிறாராம்.
3 இயக்குநர்களின் தோல்வி
தமிழ்த் திரையுலகின் மூன்று பெரிய இயக்குநர்கள் உருவாக்கிய அண்மைய மூன்று படங்கள் தோல்வி கண்டுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்த ‘தக் லைஃப்’ விமர்சகர்களால் நொறுக்கப்பட்டுள்ளது. கமலின் முந்தைய படங்களைவிட இந்தப் படம் சுமார் என்று பலர் விமர்சித்துள்ளனர்.
சங்கர் இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் உருவான தெலுங்குப் படம் ‘கேம் சேஞ்சர்’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமர்சன, வசூல் ரீதியில் படம் மொத்தமாகப் படுத்துவிட்டது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. பெரும் வெற்றி பெறும் என்று தனது திரையுலக நண்பர்களிடம் கூறி வந்தாராம் சல்மான். இதனால் இந்தியில் தம்மால் பெரிய வெற்றிவலம் வர முடியும் என்று உற்சாகத்தில் இருந்தார் முருகதாஸ். ஆனால், இந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்பதுபோல் படுதோல்வி கண்டுள்ளது.
கமலின் சொத்து மதிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ போல் பெரிய வெற்றிப்படம் ஏதும் அமையவில்லை எனலாம். தோல்விப் படங்கள் என்றாலும் இவரது வருமானத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இந்நிலையில், கமலின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
கமலின் மொத்த சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ.300 கோடிக்கும் அதிகம். இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடியாகும். அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245 கோடி. நான்கு சொகுசு கார்களை வைத்துள்ள கமல், அதன் மதிப்பு ரூ.8.43 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
கூடவே, ரூ.49 கோடி கடன் இருப்பதாகவும் இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்த வேட்புமனுவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.