‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும் என்று பலமுறை கேட்டு அலுத்துப்போன ரசிகர்கள் மௌனமாகிவிட்ட நிலையில், ஒரு நல்ல தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் பாகத்தை தமது உதவியாளரை வைத்து இயக்கி, தாம் மேற்பாற்வையிடலாம் என்று நினைத்துள்ளாராம் வெற்றிமாறன். ஆனால், முதல் பாகத்தில் இருந்த அனைவருமே வெற்றிமாறன்தான் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
எனவே, ‘வாடிவாசல்’ முடிந்த பிறகு இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று குழுவிடம் கூறிவிட்டார் வெற்றி.
இயக்குநர் மாரி செல்வராஜை புத்தகப்புழு எனலாம். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் அவரது வாசிப்பில் இருக்கும்.
இதுவரை வாடகை அலுவலகத்தில் இருந்து வந்த அவர், இப்போது சொந்த அலுவலகத்திற்குக் குடிவந்திருக்கிறார்.
தமது மனங்கவர்ந்த எழுத்தாளர்களின் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை ‘ஃபிரேம்’ செய்து, அந்த அலுவலகத்தின் சுவரை அலங்கரித்துள்ளார் மாரி.
மேலும், அங்கேயே சிறிய நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளார். அவர் வாசித்த, அடுத்து வாசிக்க உள்ள புத்தகங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.
1990களைச் சேர்ந்த திரை ரசிகர்களுக்கு இயக்குநர் கே.எஸ்.அதியமானை நிச்சயம் நினைவிருக்கும். ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’ ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்தவர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழில் ஓரளவு சாதித்த கையோடு, இந்தித் திரையுலகுக்குச் சென்றார் அதியமான். அங்கு சில படங்களை இயக்கியவர், இப்போது மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ளார்.
இம்முறை ரேவதி, லிஜோமோல், விதார்த் ஆகிய மூவரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அதியமான் இயக்கிய ‘தலைமுறை’ படத்தில் ரேவதி நடித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிலர் அதியமானைத் தொடர்புகொண்டு ‘சொர்ணமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு கேட்டுள்ளனராம்.

