சென்னை: லட்சக்கணக்கான மதிப்புள்ள ஹவாலா பணத்தைக் கடத்த முயன்ற மூன்று பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து போதைப் பொருள்களும் ஹவாலா பணமும் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல் அதிகாரிகள், அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய மூன்று பேரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெண் உட்பட மூவரிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக பலர் கைதாகி உள்ளனர். லட்சக்கணக்கில் ஹவாலா பணம் சிக்கியதை அடுத்து, காவல்துறை தனது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

