தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘தக் லைஃப்’

2 mins read
f7fdaa1b-3727-4d0a-aa1c-b712d1556cd7
கதை நகர்வு மிகவும் மெதுவாக இருப்பதால் படம் நீண்ட நேரம் ஓடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. - படம்: இணையம்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கும் சர்ச்சைகளுக்கும் இடையே ஜூன் 5ஆம் தேதி வியாழக்கிழமை உலகெங்கிலும் வெளியாகியுள்ளது ‘தக் லைஃப்’ திரைப்படம்.

முதன்முறையாகக் கமல் - சிம்பு கூட்டணி, 38 ஆண்டுகளுக்குப்பின் கமல் - மணிரத்னம் கூட்டணி, ‘விருமாண்டி’ படத்திற்குப் பிறகு கமல் - அபிராமி இணை எனப் பல்வேறு அம்சங்கள் நிறைந்திருந்ததால், ‘நாயகன்’ திரைப்படத்தை விஞ்சும் எனும் இயல்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக இருந்தது.

படம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு கதாபாத்திர அறிமுகத்துக்கும் ரசிகர்களின் ஆரவாரம் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல அது தொய்வடைந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்தியாவின் தலைநகரைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ‘தக்’ ரங்கராய சக்திவேல், தமது குழுவின் தவற்றினால் உயிரிழந்தவரின் மகன் ‘அமரனைத்’ தன் மகன்போல வளர்க்கிறார்.

“யார் பெரியவர்?” எனும் போட்டியில் வெல்ல, வளர்த்த கிடா மார்பில் பாயும் பாணியில் அமைந்த மிக வழக்கமான கதை. அதிர்ச்சியளிக்கும், எதிர்பாராத் திருப்பங்கள், வியப்புகள் என எதுவும் இல்லாத நேரான கதைக்களம்.

சிம்பு அமரனாக வாழ்ந்துள்ளார். கமல், மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் வயதுக்கேற்ற தோற்றத்துடன் ‘தக்’ உடல்மொழியையும், காயல்பட்டினத் தமிழையும் கைதூக்கிச் செல்கிறார்.

நாசர், அசோக் செல்வன், திரி‌‌‌ஷா, ஜோஜூ ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, ஐ‌ஸ்வர்யா லட்சுமி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். மணிரத்தினத்துக்கே உரிய வண்ணத்தில் நேப்பாளத்தின் காத்மாண்டு, டெல்லி, மும்பை என இடங்கள் அனைத்தும் பார்ப்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சி தருகின்றன.

அன்பறிவின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களிடம் உறுதியாக வரவேற்பைப் பெறும். சிம்புவின் அறிமுக சண்டைக் காட்சி, கமலைக் கொல்ல முயலும் சண்டை, இறுதியில் கமலுக்கும் சிம்புவுக்கும் நடக்கும் சண்டை என அனைத்தும் சிறப்பு. அவற்றில் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்க்கிறது.

‘டீ- ஏஜிங்’ தொழில்நுட்பத்தில் ‘நாயகன்’, ‘குருதிப்புனல்’ காலத்துக் கமலைக் காணமுடிந்தது.

யார் ரங்கராய சக்திவேல், எதனால் அவருக்கு அரசாங்கம் அஞ்சுகிறது எனும் கேள்வி கதையின் அடிநாதத்தையே அசைக்கிறது. அமரனைச் சந்தேகிக்கும் சக்திவேல், கூட்டத்திலுள்ளோரின் பேச்சைக் கேட்டுச் சக்திவேலைக் கொல்ல முடிவெடுக்கும் அமரன் எனப் படம் நெடுக அழுத்தமான காரணம் இல்லாத காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.

கமல் - அபிராமி, கமல் - திரி‌‌‌ஷா, கமல் - சிம்பு, கமல் - நாசர், கமல் - அவருடைய மகள் ‘மங்கை’ என எந்தப் பிணைப்பும் ஒட்டவில்லை; எவரது மரணமும் பார்ப்பவரிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இரு கதாநாயகர்களுக்குப் பலம் தேவைப்பட்டதால், வில்லன் பக்கத்துக் கதை வலுவிழந்துள்ளது. படம் தொடங்கி நீண்ட நேரம் கழித்தும் அறிமுகமாகிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் சோர்வைத் தருகின்றன.

அனைவருக்கும் திரையில் நேரம் ஒதுக்க வேண்டியதன் கட்டாயம் கதாபாத்திரங்களின் தாக்கத்தைக் குறைக்கின்றன. ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், பின்னணி இசை ஈர்க்கும்படியாக இல்லை.

குறிப்புச் சொற்கள்