தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமீர் கான் முதல் அனிருத் வரை

3 mins read
1bb8ef80-8ef9-4978-b53c-01523b901da8
அமீர் கான். - படம்: ஊடகம்
multi-img1 of 5

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனும் அவரது குழுவினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். எல்லாம் ‘பார்க்கிங்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்ததுதான் காரணம். அதிலும் ஒரே சமயத்தில் மூன்று விருதுகள் கிடைக்குமெனெ எதிர்பார்க்கவே இல்லையாம்.

ராம்குமார் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான முயற்சி நடந்தது. ஆனால், சில நாள்களுக்குப் பிறகு அதைப் பற்றிய பேச்சே இல்லை. என்ன காரணம் என்று அவரிடமே கேட்டால், “சிம்புவுடனான படம் நிச்சயம் உருவாகும். கல்லூரியைப் பின்னணியாகக் கொண்ட கதை. அசத்தலான கருத்தோடு வருகிறோம். கதை, திரைக்கதை தொடர்பான வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன்,” என்று தெம்பாகச் சொல்கிறார்.

ஜனவரியில் ‘மகாபாரதம்’ படப்பிடிப்பு

அமீர் கான் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டு, அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவே இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று அண்மையில் நடைபெற்ற கூலி பட விழாவின்போது கூறியிருந்தார் ரஜினி.

தற்போது தனது கனவுப் படமான ‘மகாபாரதம்‘ படத்தின் ஆயத்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டார் அமீர் கான். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பட்ஜெட் பற்றியெல்லாம், ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ் போன்றவர்களிடம் அமீர் கான் பல விவரங்களைப் பகிர்ந்து கொண்டாராம்.

மிக விரைவில் மும்பையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட இருப்பதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யூடியூபர்கள் நாயகர்களாக நடிக்கும் படம்

‘உண்மைதான் என்றும் நிலையானது. வாய்மையே எப்போதும் வெல்லும்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப்படம் ஒன்று உருவாகிறது.

படத்தின் பெயர் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. யூடியூபர்கள் கோபி, சுதாகர் கதை நாயகர்களாக அறிமுகமாகும் படம் இது. அண்மையில்தான் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

திரைப்படத்திலும் இருவரது நகைச்சுவையும் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படம் வெளியாகும் முன்பே ஏராளமான ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தயாராகும் இரண்டாம் பாகங்கள்

தன்னுடைய நடிப்பில் வெற்றியைக் குவித்த ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ படங்களின் இரண்டாம் பாகங்களைக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். இப்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்ததும், ஒன்றன்பின் ஒன்றாக இரண்டாம் பாகங்களுக்கான பணிகள் தொடங்குமாம்.

தியாகராஜ பாகவதர் கதையில் துல்கர் சல்மான்

துல்கர் சல்மான், அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல். மேலும், மலையாளப் படங்களைவிடவும் பிறமொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

தற்போது, துல்கர் நடிப்பில் உருவாகிவரும் ‘காந்தா’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. காரணம், அந்தக்காலத்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த தியாகராஜ பாகவதர் தொடர்பான கதையை வைத்து உருவாகிறது.

தற்போது மலையாளத்தில் ‘Game’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் துல்கர்.

வருத்தம் தெரிவித்த மிருணாள் தாக்கூர்

யாரையும் உருவக்கேலி செய்யும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று நடிகை மிருணாள் தாக்கூர் (படம்) கூறியுள்ளார்.

அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில், அச்சமயம் பிரபலமாக இருந்த இந்தி நடிகை பிபாஷா பாசு ஆண்மைத்தனமான தோற்றம் கொண்டவர் என்று கூறியிருந்தார்.

இக்கருத்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, மன்னிப்பு கோரியுள்ளார் மிருணாள்.

“பதின்ம பருவத்தில் நான் அளித்த பேட்டியில், முதிர்ச்சியற்று சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். யாரையும் கேலி செய்வது எனது நோக்கமல்ல. விளையாட்டாகப் பேசியது மிகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

விடைபெற்ற ஒளிப்பதிவாளர்

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான ‘கிங்டம்‘ படத்தை கிரிஷ் கங்காதரன், ஜோமோன் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

வித்தியாசமான ஒளிப்பதிவு வேண்டும் என்பதால்தான் கிரிஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். பாதிப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது ‘கூலி’ பட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

அது, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படம் என்பதால் ‘கிங்டம்’ குழுவிலிருந்து அவர் விடைபெற்றுவிட, மீதமுள்ள படத்தை ஜோமோன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அனிருத் திருமணம்

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்து அவரது தந்தை கூறிய தகவல் அவரது ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

‘கூலி’ படத்தைப் பார்க்க திரையரங்குக்குச் சென்ற அனிருத் தந்தை ரவி ராகவேந்திராவிடம், அனிருத்துக்கு எப்போது திருமணம் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு சிரித்தபடியே, “நானே உங்களைத்தான் கேட்க வேண்டும் என்றிருந்தேன். ஒருவேளை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். முடிந்தால் என்னையும் திருமணத்துக்கு அழைக்குமாறு அவரிடம் கூறுங்கள்,” என்றார் ரவி ராகவேந்திரா.

ஏற்கெனவே, அனிருத்தைப் பார்ப்பதற்காக, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான இளம் பெண்கள் வருவதாகவும் அந்த பெண்களைக் காண இளையர் கூட்டம் திரண்டு வருவதாகவும் ‘கூலி’ இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாகப் பேசியிருந்தார் ரஜினி.

குறிப்புச் சொற்கள்