அது ஒரு காலம். திரைப்படத் துறையில் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு சென்னையில் வீடு வாடகைக்கு கிடைப்பதே சிரமம்.
ஏனென்றால், இவர்களுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. படப்பிடிப்பு இல்லாத நாள்களில் பகல் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு, இரவில் வசதியான இயக்குநரிடம் பணியாற்றும் உதவி இயக்குநர் அறைகளில் சத்தமில்லாமல் பதுங்குவார்கள்.
இன்னும் சில உதவி இயக்குநர்களோ, கல்யாண வீடுகளில் சமையல் வேலைக்குச் செல்வார்கள். காலை, மதியம் இரவு என மூன்று வேளை உணவுடன் சம்பளமும் கிடைப்பதால் அந்த வேலைக்குச் செல்வார்கள்.
பாரதிராஜா உதவி இயக்குநராகவும் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் சகோதரர்கள் வாய்ப்பு தேடும்போதும் உணவுக்காக இவர்கள் பல நேரம் தவித்ததுண்டு.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அப்போது பாடகராகிவிட்டார். தன்னை யாரேனும் திருமண நிகழ்ச்சிக்கு பாட அழைத்தால், ‘எங்க வீட்லருந்து நாலு பேர் வருவாங்க’ எனச் சொல்லிவிடுவாராம். நான்கு பேரும் வயிறார கல்யாண விருந்து சாப்பிட்டு வருவார்கள்.
இப்படியெல்லாம் உணவுக்கும் உறைவிடத்திற்கும் உதவி இயக்குநர்கள் அல்லாடிய காலம்... காலப்போக்கில் மாறியது.
கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக இருந்து, யதார்த்த சினிமாவைக் கற்றுக்கொண்டவர் பாரதிராஜா. அதனால்தான் பாரதிராஜாவின் படங்களை இன்று பார்த்தாலும் உயிர்ப்போடும் ரத்தமும் சதையுமாய் பார்வையாளனுக்குள் பாதிப்பை உண்டாக்கும்.
சிவாஜிக்கும் மு.கருணாநிதிக்கும் பெயர் வாங்கித் தந்த, உணர்ச்சிகரமான படைப்புகளில் ஒன்று ‘மனோகரா’. பம்மல் கே.சம்பந்த முதலியார் எழுதிய கதை. இதைச் சிறப்பாக இயக்கியிருந்தார் எல்.வி.பிரசாத்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ், தெலுங்கு, மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரசாத், இந்தியாவின் பிரபல சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர்.
பாரதிராஜா தனது பட வேலையாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்தபோது, அவரைச் சந்தித்த பிரசாத், “பாரதி! நான் கொஞ்ச நாள் உங்ககிட்ட உதவி இயக்குநராக வேலை செய்ய விருப்பப்படுகிறேன்,” என்றார்.
இதைக் கேட்ட பாரதிராஜா ஆடிப்போனார். “என்னய்யா இது?” என அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
“ஆமாம் பாரதி! நான் கதையை வைத்து படம் இயக்குகிறேன். ஆனால் நீங்களோ கிராமத்து உணர்ச்சிகளை வைத்து படம் இயக்குகிறீர்கள். இந்த உணர்வுபூர்வ உத்தியை எப்படி திரைக்குக் கடத்துகிறீர்கள் என்ற வித்தையை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்,” என்றார் பிரசாத்.
பாரதிராஜாவின் படைப்பைப் பாராட்ட பிரசாத் கையாண்ட புதிய உத்திதான் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று சொன்னது. ஆயினும், இயக்குநரிடம் கற்க வேண்டிய விஷயங்கள் குறித்து, உதவி இயக்குநர்களுக்கு மறைமுகமாகப் பாடம் நடத்தினார் பிரசாத் என்பதே இதன் அர்த்தம்.
பல ஆண்டுகளுக்குப் பின் கங்கை அமரனின் திரைச் சேவையைப் பாராட்டும் ஒரு விழாவில் பாரதிராஜா கலந்துகொண்டார். அப்போது அமரனின் மகனும் இயக்குநருமான வெங்கட்பிரபுவிடம் பாரதிராஜா, “பிரபு... உன்கிட்ட நான் கொஞ்ச நாள் உதவி இயக்குநரா வேலை செய்யணும்டா. கிராமத்தில் இருந்து சினிமாவுக்குள் வரும்போது கிராமத்து மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மட்டும்தான் கொண்டு வந்தேன். ஆனால் நீ தொழில்நுட்ப ரீதியில் காட்சிகளை ரசிகர்கள் மனத்துக்கு கடத்துகிறாய். அதை உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று பாராட்டினார் பாரதிராஜா.
உதவி இயக்குநர்களுக்கு உரிய ‘தினப்படி’ பணத்தை மொத்தமாக தயாரிப்பு மேலாளரிடம் வாங்கிக்கொண்டு, அதை தன் செலவுக்கு வைத்துக்கொள்ளும் சின்னப்புத்தி இயக்குநர்களும் முன்பு இருந்தார்கள்.
அப்படியும் யாராவது ஒருவர் தயங்கித் தயங்கி பணம் கேட்டால், “நீ என்னிடம் உதவி இயக்குநராக இருப்பதே உனக்குப் பெருமைதான்,” எனச் சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள்.
இருவகை குணாதிசயங்கள் உண்டு!
‘ஜூனிய’ரை ‘ராகிங்’ செய்யும் மூத்த மாணவர்கள் உண்டு. அப்படி பாதிக்கப்பட்ட மாணவர்கள்தான், பின்னாள்களில் மூத்த மாணவர்கள் ஆனதும் புதியவர்களைச் சீண்டுவார்கள்.
“நான் பட்ட சிரமத்தை இவனும் படட்டும்,” எனும் ஒருவகை மனோபாவம் அது.
“நாம்தான் சிரமப்பட்டோம். இந்த மாணவர்களுக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்று நினைப்பது இன்னொரு வகை - இது ஓர் உயர்ந்த மனோபாவம்.
சங்கர் பிரம்மாண்ட இயக்குநர் ஆனதும், தன் உதவியாளர்களின் தகுதிக்கேற்ப வாகனங்கள் வாங்கித் தந்து அன்றாடம் பெட்ரோல் நிரப்புவது முதல், அவர்கள் ஆடைகளை ‘அயர்ன்’ செய்யும் செலவு வரை அனைத்துக்கும் பணம் கொடுப்பது வழக்கம்.
ரஜினி, கமல் என பெரிய நட்சத்திரங்களை வைத்து படமெடுக்கும் சங்கர், தன் உதவியாளர்களும் ஒரு நிறுவனத்தின் உயரதிகாரிகள் போல் ‘ஸ்டைலாக’ இருக்க வேண்டும் என விரும்புவார். அதற்கேற்ப அவர்களின் தகுதிகளை உயர்த்துவார். திறமைகளை உயர்த்திக்கொள்வது அவரவர் பொறுப்பு.
பெரும்பாலும், ‘மாஸ் கம்யூனிகேஷன்’ எனப்படும் ‘விஸ்காம்’ அல்லது நன்கு படித்தவர்களையே இயக்குநர்கள் இப்போது தங்களின் உதவியாளர்களாகச் சேர்க்கிறார்கள்.
கமல்ஹாசனிடம் உதவி இயக்குநர்களாக இருக்க விரும்புவோர் உலக சினிமா ரசிகர்களாகவும் அண்மைக்கால தொழில்நுட்பங்களை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இயக்குநர் வெற்றிமாறன் தனது உதவியாளர்களை எழுத்துத் தேர்வு வைத்துத்தான் தேர்வு செய்கிறார். குறிப்பாக, ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம், காட்சிகளை எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் சேர்த்துக்கொள்வார்.
மணிரத்னம் பெரும்பாலும் தன் மனதுக்குள் அசைபோட்டு, வடிவமைத்த கதையை ஆங்கிலத்தில்தான் உதவியாளர்களுடன் விவாதிப்பார்.
முன்பு... நகர்ப்புற மக்களுக்கு கட்டடத் திரையரங்குகளும் கிராமப்புற மக்களுக்கு ‘டூரிங் டாக்கீசும்’தான் சினிமா பார்க்கும் இடமாக இருந்தது.
பிறகு, டிவிடி, விசிடி,, தொலைக்காட்சி என உருமாறி, கைபேசி மூலம் படம் பார்க்கும் வசதி வந்துவிட்டது. சினிமா சந்தையும் தமிழகம் தாண்டி, இந்தியாவைக் கடந்து, இன்று ஓடிடி எனும் புதிய விற்பனை மையத்தை ஏற்படுத்தி உள்ளது.
வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக, சினிமா வளர்ந்து கொண்டேதான் இருக்கும். உதவி இயக்குநர்களின் தேவை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதற்கேற்ப, தங்கள் தகுதிகளை குறைந்தபட்சம் தயார் செய்துகொண்டு வரும் உதவி இயக்குநர்கள், குரு போற்றும் சீடர்களாகிறார்கள்.