திரைப்பார்வை: 5
அஜித்தின் பிரியாணி, விஜய்யின் பட்டாசு, நயன்தாராவின் ரொக்கப் பரிசு
முன்பெல்லாம் தமிழ்த் திரையுலகில் தீபாவளி என்றாலே ஆடல், பாடல், கொண்டாட்டம் எனப் பண்டிகை களைகட்டும். அண்மைய சில ஆண்டுகளில் கொண்டாட்டத்தின் அளவு சற்றே குறைந்தாலும், உற்சாகமும் மகிழ்ச்சியும் குறையவில்லை எனலாம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகை சில நட்சத்திரங்களுக்குத் தித்திப்பாக அமைந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இம்முறை தீபாவளி பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாடுகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் ‘அமரன்’ படத்தை அமெரிக்க ரசிகர்களுடன் அவர் திரையரங்கில் கண்டு ரசிக்க ஏற்பாடாகி இருக்கிறது. இதற்காக அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருப்பதாகத் தகவல்.
படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில், நடிகர் கமல்ஹாசனும் அமெரிக்கா சென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது ‘அமரன்’ படம்.
இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் நாயகியான சாய் பல்லவி, டெல்லியில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ‘அமரன்’ படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே நினைவிடத்துக்குச் செல்ல வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தாராம்.
தொடர்புடைய செய்திகள்
“‘அமரன்’ படத்தின் வெற்றி, தோல்வியைக் கடந்து, இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புதான் தமக்குக் கிடைத்த ஆகச்சிறந்த தீபாவளிப் பரிசு,” என நெகிழ்கிறார் சாய் பல்லவி.
நடிகை நயன்தாரா இம்முறை தீபாவளிக்கு எங்கும் செல்வதாக இல்லை. தனது இரு குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது என முடிவு செய்துள்ளாராம்.
தீபாவளிக்கு முன்பே அவர் பலருக்கு தீபாவளிப் பரிசுகளை வழங்கி விட்டாராம். சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கிறார் நயன்தாரா.
அங்குள்ள காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரை தன் வீட்டுக்கு அழைத்து ரொக்கப் பணமும் இனிப்புகளும் வழங்கியுள்ளார்.
அது மட்டுமல்ல, அப்பரிசுகளை தனது இரு குழந்தைகளின் பிஞ்சு கைகளால் கொடுக்கச் செய்துள்ளார். பரிசு பெற்ற அனைவரும் குழந்தைகளையும் பெற்றோரையும் மனதார வாழ்த்திச் சென்றுள்ளனர்.
நடிகர் அஜித் எப்போது, எங்கு இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. இம்முறை படப்பிடிப்பில் இருப்பதால் ஸ்பெயின் நாட்டில் தங்கியிருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
இந்த ஆண்டு அங்குதான் படக்குழுவினருடன் தீபாவளி கொண்டாட இருக்கிறாராம். அனைவருக்கும் அவர் கைப்பட தயாரித்த பிரியாணி பரிமாறப்பட உள்ளது. மேலும், அனைவருக்கும் சிறப்புப் பரிசுகளும் அளிக்கப் போகிறாராம் அஜித்.
தீபாவளி சமயத்தில் வாய்ப்பு கிடைத்தால் நெருக்கமான தோழிகளுடன் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார் நடிகை திரிஷா. இம்முறை அவரும் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டில்தான் இருக்கிறார்.
எனவே தீபாவளி அன்று அவருக்கும் அஜித் சமைக்கும் பிரியாணியை ருசிக்கும் ‘பாக்கியம்’ கிடைத்திருக்கிறது.
விஜய்யைப் பொறுத்தவரை திரை உலகில் ஓரளவு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் சுமுக உறவைக் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் வேளையில், தனக்குத் தெரிந்த செய்தியாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேரியரில் பிரியாணியை வைத்து அனுப்புவது இவரது வழக்கம்.
அந்த நான்கைந்து அடுக்கு கேரியரில், ஏதேனும் ஓர் அடுக்கில் பிரியாணிக்குள் தங்க காசு, மோதிரம், பெரிய சங்கிலி என்று ஏதாவது பரிசு வைக்கப்பட்டிருக்கும்.
இப்படிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இன்ப அதிர்ச்சி அளித்து வந்த அவர், தற்போது அரசியல் கட்சித் தலைவராக மாறிய நிலையில் கடந்த கால வழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அவரது தவெக கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள், நலிவடைந்த தொண்டர்கள், கட்சிப் பேச்சாளர்கள் எனப் பலருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள் என பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
சூர்யா, ஜோதிகாவுக்கு ஒரு வகையில் இது தலை தீபாவளி எனலாம். தனது 18 வயது வரை மும்பையில் வசித்து வந்தார் ஜோதிகா. திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது அவர் மும்பைவாசிதான். பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்க சென்னைக்கு தற்காலிகமாக குடிபெயர்ந்த அவர், சூர்யாவைத் திருமணம் செய்த பின்னர் நிரந்தர சென்னைவாசி ஆனார்.
“கடந்த 27 ஆண்டுகளாக எனக்காகவும், எங்கள் குழந்தைகள், என் குடும்பத்துக்காகவும் தனது உறவுகள், நண்பர்களை மறந்துவிட்டு தன்னை அர்ப்பணித்து விட்டார் ஜோதிகா. அவருக்கு நன்றி செலுத்தும்விதமாக நானும் அவரும் இப்போது மும்பையில் குடியேறி உள்ளோம். எனவே, இது எங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த தீபாவளி,” என்கிறார் சூர்யா.
சித்தார்த்-அதிதி ராவ், அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் ஆகிய நட்சத்திரத் தம்பதிகளுக்கும், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகைகள் ஹன்சிகா, வரலட்சுமி ஆகியோருக்கும் இது தலை தீபாவளியாக அமைந்துள்ளது.