தமிழ்த் திரையுலகில் ஒரு நகைச்சுவை நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம் இன்று ஒரு கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் சந்தானம். 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
இதில் நடித்த சந்தானம், யோகி பாபு ,சுவாமிநாதன் போன்ற நடிகர்கள் அனைவரும் திரைப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சந்தானத்துடன் நடித்து வந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் பாலாஜி. இவருக்கு உடல் நலம் சரியில்லாத போது சந்தானம் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி இருக்கிறார் என நடிகர் சுவாமிநாதன் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூறினார்.
மேலும், உடல் நலம் சரியில்லாமல் பாலாஜி இறந்துவிட, அப்போதும் சந்தானம்தான் அந்தக் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியதாகச் சுவாமிநாதன் அந்த நேர்காணலில் சொன்னார். பாலாஜியின் மறைவிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்குச் சந்தானம் புதியதாக வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தன்னுடன் நடித்த நகைச்சுவை நடிகர் சேசுவுக்கும் மருத்துவமனையில் இருந்தபோது பல உதவிகள் செய்து இருக்கிறார் சந்தானம் என சுவாமிநாதன் அதில் சொன்னார். சந்தானம் செய்கின்ற உதவி வெளியே பலருக்கும் தெரியாது என்றார் அவர்.
“தன்னுடன் நடித்த சக நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் சந்தானம் முதல் ஆளாக வந்து நிற்பார். தன்னுடைய சொந்த உழைப்பாலும் திறமையாலும் இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவர். சந்தானம் மிகவும் உணர்ச்சிப் பிணைப்புக் கொண்ட மனிதர்,” என நெகிழ்ச்சியோடு சுவாமிநாதன் கூறினார்.
இதற்கு முன் நாம் கேள்விப்பட்ட சில நடிகர்கள் அவர்களோடு நடித்த சக நடிகர்கள் எத்தனையோ பேர் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போயிருக்கின்றனர்.
அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அவர்கள் வரவில்லை. ஆனால் சந்தானம் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.