தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்றும் ஜெயம் ரவியை மகனாகவே பார்க்கிறேன்: தயாரிப்பாளர் சுஜாதா

3 mins read
6960e71e-d989-457a-abb5-3594b2000e53
ஜெயம் ரவியுடன் தயாரிப்பாளர் சுஜாதா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி), அவருடைய மனைவி ஆர்த்தி ரவி ஆகிய இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டுத் தங்களது விளக்கங்களைக் கூறி வரும் நிலையில், இப்போது ஆர்த்தியின் அம்மாவும் படத் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் இன்ஸ்டகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜெயம் ரவியை இன்றும் நான் என் மகனாகவே பார்க்கிறேன் என்றும் அவரும் என்னை அம்மா அம்மா என்றுதான் அழைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த 25 ஆண்டுகளாகத் திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும்.

“கடந்த சிலகாலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தைப் பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர விரும்பினேன். ஆனால், என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லாமல் போனால், என்னைப் பற்றி சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இப்போது விளக்கம் அளிக்கிறேன்.

“அடங்க மறு’, ‘பூமி’, ‘சைரன்’ என்ற மூன்று திரைப்படங்களை என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து எடுத்தேன்.

“இந்தப் படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறேன்.

“அந்தப் பணத்தில் 25% ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கிக் கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

“ஆனால், இந்தப் படங்களின் வெளியீட்டின்போது நான் எனது பல கோடி ரூபாய் கடன்களுக்காக ஜெயம் ரவியைப் பொறுப்பேற்க வைத்ததாகப் பொய்யான ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதில் துளியும் உண்மை இல்லை.

“அவரை வெறும் நாயகனாக மட்டும் நான் பார்த்திருந்தால்கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். அவரை எனது மாப்பிள்ளை என்பதையும் தாண்டி சொந்த மகனாகவே கருதினேன். அதனால் அவருக்கு எந்த ஒரு சிரமமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

“ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து, வாங்கிய கடனுக்காகப் பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டுப் பல கோடி ரூபாய் நஷ்டம், மன உளைச்சலை மட்டுமே நான் ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.

“மாப்பிள்ளை ஜெயம் ரவி சொன்னதுபோல், கோடி ரூபாய்க்கு அல்ல, வெறும் ஒரு ரூபாய்க்காவது நான் பொறுப்பேற்க வைத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.

“இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம், ரசிக்கிறோம்.

“நடந்து வரும் பிரச்சினையில் உங்கள்மீது அனுதாபம் ஏற்படுவதற்காக நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்தக் கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களைத் தரம் தாழ்த்தி விடுகிறது.

“என்றும் நீங்கள் நாயகனாகவே இருக்கவேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைக்கும் இந்த அம்மாவின் ஆசை. இன்று வரை என் பேரக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

“அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாகப் பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனத்திற்குத் தான் தெரியும். ஏற்கெனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தைப் பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என்மீது சுமத்தாதீர்கள், அதைத் தாங்கும் சக்தி என் மனத்திற்கு இல்லை,” என்று சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்