வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் விரும்பி மகிழ்ந்த சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது, சென்ற ஆண்டு வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' தெலுங்கு திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்.
இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தப் பாடலுக்கு ஜூனியர் என்டிஆர்-ராம் சரண் இணையின் நடனமும் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன.
இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரின் மனதில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்பதைப் பற்றி அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
'நாட்டு நாட்டு' என்ற முக்கிய பாடல் வரிகள் தமது மனதில் மின்னலாக தோன்றியபோது தாம் காரில் பயணம் செய்துகொண்டிருந்ததாக சந்திரபோஸ் குறிப்பிட்டார்.
"ஒரு குறிப்பிட்ட காட்சிக்குப் பாடல் எழுதும்படி ராஜமௌலி என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் மூன்று பாடல்களோடு அவரைச் சந்தித்தேன். அதில் அவருக்கு 'நாட்டு நாட்டு' பாடல் மிகவும் பிடித்துவிட்டது," என்று சந்திரபோஸ் உணர்ச்சிபொங்க என்டிடிவி செய்தித் தளத்திடம் கூறினார்.
மேலும், 90 விழுக்காட்டு பாடல் வரிகளை அரைநாள் பொழுதில் எழுத முடித்ததாகவும் மீதமிருந்த 10 விழுக்காட்டு பாடல் வரிகளை எழுத 19 மாதங்கள் எடுத்துக்கொண்டதாகவும் சந்திரபோஸ் கூறினார்.
சில மாற்றங்களுக்குப் பிறகு அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்றும் சந்திரபோஸ் சொன்னார்.

