பிரபல கர்நாடக இசைப் பாடகியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
வித்யா பாலன்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சுப்புலட்சுமி தோற்றத்தில் இருக்கும் வித்யா பாலனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தாம் சிறு வயது முதல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தீவிர ரசிகை என்கிறார் வித்யா பாலன்.
“என் அம்மா காலையில் முதலில் பாடும் சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியதுதான். அவருடைய குரலில்தான் எனது காலைப்பொழுது விடியும்,” என்கிறார் வித்யா பாலன்.
தம்மைப் பொறுத்தவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற பெயரே ஓர் ஆன்மிக அனுபவம்தான் என்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அன்பின் வெளிப்பாடு என்றும் கூறுகிறார் வித்யா பாலன்.
“எனது உழைப்பால் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகிறேன். மேலும் நாட்டின் ஆக உயரிய விருதைப்பெற்ற, மாபெரும் சாதனை படைத்த பெண்மணி அவர். அவரது புகழை உலகெங்கும் பரப்புவது நம் கடமை,” என்கிறார் வித்யா பாலன்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்தி மாலாதான் இவருக்குப் பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்தாராம். மேலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்த இடத்தில் அவர் வழக்கமாக அணியும் பட்டுப்புடவைகள், நகைகளைக் கொண்டு வித்யா பாலன் பாடகியின் தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளையொட்டி வித்யா பாலன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதிதான் இந்த புகைப்படங்களை எடுத்தார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
“ஒரு நாள் அனுவுடன் வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தபோது எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து சில விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து நானும் எனது கருத்துகளைத் தெரிவித்தேன். இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட அந்த உரையாடல்தான் காரணம்.
“கடந்த 1960 முதல் 1980 வரை சுப்புலட்சுமி அம்மா அணிந்த புடவைகளை முதல்முறையாக தொட்டபோதே ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது.
“அவருக்காக புடவைகளை உருவாக்கிய பிரபல துணிக்கடைகளில் பல்வேறு விவரங்களைப் பெற்றோம். புதுப்புடவைகள் சில வாங்கினோம்,” என்கிறார் வித்யா பாலன்.
பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப் படுகிறதா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
மேலும், முன்னணி இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் எம். எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை இணையத்தொடராக உருவாகும் என்றும் அதற்காகத்தான் வித்யா பாலன் அண்மைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
எனினும் வித்யா பாலன் தரப்பில் இருந்து இத்தகைய தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. யார் அந்த இயக்குநர் என்பது குறித்தும் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.