செயற்கை நுண்ணறிவால் திரையுலகம், ஊடகத் துறை உள்ளிட்டவற்றில் பல புதிய மைல்கற்களும் சாதனைகளும் படைக்கப்பட்டு வரும் அதே வேளையில் இந்த அதிநவீன தொழில்நுட்ப முறை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தவறான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பல பிரபலங்களில் இப்போது திரிஷாவும் ஒருவராகிவிட்டார்.
‘தளபதி’ விஜய்யோடு ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துப் பலரின் மனதைக் கொள்ளைகொண்ட திரிஷா, பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்ற ஆண்டு வெளியான ‘லியோ’ படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தார்.
அதோடு, அண்மையில் வெளியான ‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன் ஒரு குத்துப் பாட்டில் ஆடி அசத்தினார்.
பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை திரிஷாவின் அடுத்த படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ‘தல’ அஜித்தின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’யும் அவற்றில் ஒன்று.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்தது ‘கோட்’. அதேவேளை, முகம் சுளிக்கவைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவின்வழி உருவான காணொளி ஒன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளி ரசிகர்கள் பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் ‘கோட்’ படத்தில் இருந்ததைப் போல் மஞ்சள் நிறச் சேலையில் கவர்ச்சிகரமாகக் காணப்படும் திரிஷாவை ஒருவர் அணைப்பது போலவும் உதடுகளில் முத்தமிடுவது போலவும் தொழில்நுட்பத்தின் உதவியோடு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயல்களைத் தொடக்கத்திலேயே கண்டிக்கவேண்டும் என்றும் இதனால் பிற்காலத்தில் கலாச்சார சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் ரசிகர்கள் குரல் எழுப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

