வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் அஃப் ஆல் டைம்’ (தி கோட்) படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
விஜய்யின் இரண்டாவது கடைசி திரைப்படமான இதில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா என ஏற்கெனவே நட்சத்திரப் பட்டாளம் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தில் இப்போது திரிஷாவும் சேர்ந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இயக்குநர் வெங்கட் பிரபு இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது.
‘கோட்’ படத்தில் இடம்பெறும் சிறப்புப் பாடல் காட்சி ஒன்றில் திரிஷா இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் விஜய்யும் திரிஷாவும் இணைந்து நடனமாடுவர் என்றும் கூறப்படுகிறது.
படம் வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன்பு இப்பாடல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தர இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
படக்குழு இந்த சிறப்புப் பாடல் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட படத்தின் மூன்று பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இல்லாதது அதற்குக் காரணம்.
‘கோட்’டில் திரிஷா கெளரவ வேடத்தில் இடம்பெறுவார் என்று சில மாதங்களுக்கு முன்பே பேசப்பட்டது. ஆனால், இயக்குநர் வெங்கட் பிரபு அதை உறுதிப்படுத்தியிருப்பதாக இப்போதுதான் செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்தியப் படங்களில் பிரபல நடிகைகள் ஒரு பாடலில் மட்டும் வந்துசெல்வது என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றே. 2000, 2010களில் நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, பூஜா ஹெக்டே, தமன்னா எனப் பலர் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டிருக்கின்றனர்.
ஆனால் திரிஷா தனது இத்தனை ஆண்டு திரையுலகப் பயணத்தில் இதுவரை அதைச் செய்ததில்லை. இப்போது அந்தப் போக்கை மாற்றிக்கொண்டுவிட்டார் போல் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘கோட்’டுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘லியோ’ படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு காலத்தில் வெற்றி ஜோடியாகப் பார்க்கப்பட்ட இருவரும் 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘லியோ’வில் மீண்டும் ஜோடி சேர்ந்தனர்.
2004லிருந்து 2008ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே காதல் நிலவுவதாகவும் சில வதந்திகள் அண்மையில் வெளியாயின.
அடுத்ததாக ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் திரிஷா.