பல படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வரும் திரிஷா மீண்டும் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு விஜய்யின் ‘லியோ’, ‘கோட்’ போன்ற படங்களில் நடித்த திரிஷா தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் நடிப்பதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ உட்பட இரண்டு மலையாள படத்திலும் நடிக்கிறார்.
இப்படி பல மொழிகளிலும் நடித்து வரும் திரிஷா, அடுத்தபடியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘ராஜா ஷாப்’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஏற்கெனவே பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் ‘பௌர்ணமி’, ‘புஜ்ஜி காடு’ போன்ற படங்களில் திரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் பிரபாஸின் நடிப்பில் உருவாகவுள்ள ‘சலார் 2’ படத்தில் தென் கொரிய சினிமாவின் உச்ச நடிகராக உள்ள நடிகர் டான் லீ நடிக்கவுள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக டான் லீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தென் கொரிய படங்களுக்கும் நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் டான் லீ ‘சலார்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ள தகவல் பிரபாஸ் ரசிகர்களை மட்டும் இல்லாமல், டான் லீ ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.