‘பொன்னியின் செல்வன்’ திரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
அந்தப் படத்தில் அவர் நடித்திருந்த ‘குந்தவை’ கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.
அதற்கு முன்பு வரை அவரது நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியைத் தழுவின. அதனால், நிறைய வாய்ப்புகளை அவர் இழந்தார்.
ஆனால், பொன்னியின் செல்வன் படத்தில் அவருடைய தோற்றம் அவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடித்ததால் மீண்டும் முன்னணி நடிகையாக வலம்வர ஆரம்பித்தார்.
அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘விடாமுயற்சி’, ‘குட் பேட்அக்லி’ ஆகிய படங்களில் அஜித்துடன் ஜோடி சேர்ந்தார்.
கமல் நடித்த ‘தக் லைஃப்’ படத்திலும் அவர் நடித்தார். அப்படத்தில் அவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை. மேலும், அந்த வேடத்தில் நடித்ததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் திரிஷா.
தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், புதிய பட வாய்ப்புகளைத் திரிஷா தவிர்த்துவருவதாகக் கூறப்படுகிறது.
அதற்குக் காரணம், தமது நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் நிலவரத்தால் தற்போது எந்தப் படங்களிலும் சிறிதுகாலம் நடிக்கவேண்டாம் என அவர் முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘கருப்பு’ படத்தில் மட்டும் தற்போது கவனம் செலுத்திவரும் அவர், சிறிதுகால ஓய்விற்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.
இதற்கிடையில், பெண்களை மையப்படுத்தி வரும் படங்களுக்கும் மறுப்புத் தெரிவித்துவிடுவாராம் திரிஷா.
‘கருப்பு’ படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அது பொங்கல் வெளியீடாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.